"மத வெறியர்களால் இடிக்கப்பட்ட இந்துக் கோவிலை மீண்டும் கட்டித் தருவோம்!!" - பாகிஸ்தான் மாகாண அரசு!!
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்தூன்குவா மாகாணத்தின் கராக் மாவட்டத்தில் இருந்த ஒரு கோவில் கடந்த வாரம் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக 350 பேர் மீது மாகாண போலீசார் தேச விரோத குற்ற வழக்கு பதிவு செய்து அவர்களில் சிலரை கைதும் செய்துள்ளனர்.
இந்த நிலையில் கோவிலை மீண்டும் கட்டுவதற்கான அனைத்து உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் மஹ்மூத் கான் தெரிவித்துள்ளார்.
கோவில் இடிப்புத் தொடர்பான போலீசின் குற்றப்பத்திரிகையில், உள்ளூர் மதகுரு மவுலானா முகம்மது ஷரீப் என்பவர் தலைமையில் 400 பேர் திரண்டு சென்று கோயிலை இடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட 30க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதில், ஜேமியாத் உலெமா ஈ-இஸ்லாம் கட்சி தலைவர் ரெஹ்மத் சலாம் கத்தக்கும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கட்சியின் தூண்டுதலால்தான் கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தீவிரவாதம் தொடர்பான சட்டங்களும் முதல் தகவல் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளதாக மாகாண போலீஸ் தலைவர் கே.பி.கே. சனவுல்லா அப்பாசி தெரிவித்துள்ளார். மேலும், சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க போலீஸ் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சங்கர்.
Comments