பொள்ளாச்சியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கிரிக்கெட் போட்டி..!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இளைஞர்களிடம் வாக்குபதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நேற்று கிரிக்கெட் போட்டி தொடங்கியது.
இதை தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதன் தொடங்கிவைத்தார். பின்னர் தேர்தலில் நேர்மையான முறையில் வாக்களிப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தணிகைவேல், தனி தாசில்தார் காந்திமதி, கிராம நிர்வாக அலுவலர் தன்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
போட்டியில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 17 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன. 10 ஓவர் கொண்ட போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடத்தப்படுகின்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்
வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலையில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி வாக்காளர்களை வாக்களிக்க வருமாறு பத்திரிக்கை கொடுத்து அழைப்பு விடுக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி துரைசாமி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி வெங்கடாச்சலம் ஆகியோர் வீடு, வீடாக சென்று பத்திரிக்கையை வழங்கினர்.
அப்போது சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது போன்று சீர்வரிசை பொருட்களை கொண்டு வாக்காளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் முருகேசன், வருவாய் ஆய்வாளர் செல்லத்துரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி.
Comments