சிவகங்கையில் சிட்டிங் அமைச்சருக்கு சீட் கேட்டு தீக்குளிக்க முயற்சி! ஆள மாத்து கோசம்!
தொகுதியின் சிட்டிங் அமைச்சருக்கு சீட்டு கொடுக்க வேண்டி, ஆளும் அதிமுகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் அமைச்சரின் உறவுகள். நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று (10.03.2021) இரண்டாம் கட்டமாக அறிவித்தது அதிமுக.
இதில் சிட்டிங் அமைச்சர்களாக உள்ள பாஸ்கரன், வளர்மதி, நிலோபர் கபில் உள்ளிட்டோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராகவும், சிட்டிங் அமைச்சராகவும் உள்ள பாஸ்கரனிற்குப் பதில் சிவகங்கை அதிமுக கட்சியின் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனுக்கு சிவகங்கையில் போட்டியிட வாய்ப்பை அளித்தது அதிமுக தலைமை.
இதனால் கொதிப்படைந்த அமைச்சர் பாஸ்கரனின் ஆதரவாளர்கள், இன்று சிவகங்கை சிவன் கோவில் முன் திரண்டு, "ஆள மாத்து.. ஆள மாத்து” என கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்று பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலையின் முன் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதில் அமைச்சர் பாஸ்கரனின் சொந்த ஊரான தமராக்கியைச் சேர்ந்த பாலா என்பவர் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-பாரூக், சிவகங்கை.



Comments