மலைகளின் இளவரசியின் மக்கள், வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பு

          -MMH


      முதுமலை தேசிய பூங்கா (Mudumalai National Park) ஆனது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில் கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. 1940 இல் தொடங்கப்பட்ட இதுவே தென்னிந்தியாவின் முதல் வன உயிரியல் காப்பகம் ஆகும்.


இந்த வனவிலங்கு காப்பகம் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான், பறக்கும் அணில், பெரிய இந்திய சிவப்பு அணில், காட்டு நாய், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நரி, காட்டு முயல், முதலை, கீரி, கழுதைப்புலி, மலைப்பாம்பு போன்ற பல்வேறு வகையான விலங்குகளுக்கும் மயில், பல வகையான காட்டுக்கோழிகள், புறா, கழுகு, பருந்து, வல்லூறு போன்ற பல்வேறு வகையான பறவைகளுக்கும் புகலிடமாக அமைந்துள்ளது.இந்த வனவிலங்கு காப்பகத்தை சுற்றிப்பார்க்க நாள்தோறும் ஏறாலமான சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு, இந்தியாவின் பல பகுதிகள் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளில் இருந்தும் வருகைதருகின்றனர். இந்த புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி மசினகுடி, மண்வயல், மாவனல்லா உள்ளிட்ட 20 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் ஏராளமானோர் தங்களிடம் உள்ள ஜீப்களை கொண்டு இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை முதுமலை வன பகுதிக்குள் அழைத்து சென்று சுற்றி காண்பித்து, அதில் கிடைக்கும் வருவாய் மூலம் வாழ்ந்து வருகின்றனர்.


அதற்காக புலிகள் காப்பக நிர்வாகம் சூழல் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எப்போதும் கோடை சீசன் காலத்தில் குவியும் சுற்றுலா பயணிகளால், தனியார் ஜீப் தொழிலாளர்கள் அதிக வருவாய் ஈட்டி வந்தனர்.ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால், இந்த ஆண்டு கோடை சீசன் ஜீப் தொழிலாளர்களின் வாழ்வை வதைத்து வருகிறது. முதுமலையில் வாகன சவாரி தொழில் செய்து வரும் தனியார் ஜீப் ஓட்டுனர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.மசினகுடி பகுதியில் ஜீப் சவாரியில் சுமார் 200 ஜீப்கள் இயங்கி வருகின்றன. இந்த ஜீப்களில் சுற்றுலாப் பயணிகள் செல்லும் போது உள்ளூர் வழி காட்டி ஒருவரும் செல்வார். ஊரடங்கால் சுற்றுலா வழிகாட்டிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜீப் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் என பலரும் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.


இந்த சுற்றுலா சீசன் நாட்களில் கிடைக்கும் வருவாயை கொண்டு தான், தன் குடும்பத்தை நடத்தி வருவதுடன் மருத்துவம், கல்வி என அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்றனர். கடந்த 35 நாட்களுக்கு மேலாக சவாரி செல்ல முடியாததால் ஜீப் ஓட்டுனர்கள் உள்பட அனைவரும் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். ஆண்டிற்கு சுமார் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் மசினகுடிக்கு வந்து செல்வது வழக்கம். அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த மசினகுடி மக்கள் தற்போதைய கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.


எனவே தங்களின் இந்த கஷ்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியரும் அரசு அதிகாரிகளும் தங்களுக்கு உதவவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


:இவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்குமா அரசு?


-H.முகமது சைஃபுல்லா,சென்னை. சுரேஷ்குமார். Comments