கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா...
-MMH
வணக்கம்! இன்று ஆடி வெள்ளி! இந்நாளில் படிப்பினையூட்டும் கதை ஒன்றைப் பார்க்கலாமா?
கவுசிகன் என்ற முனிவர் காட்டில் கடுந்தவம் செய்கிறார். நெடுநாள் செய்த தவம் நிறைவடைந்த நிலையில் ஒருநாள் கண் விழித்தார். அப்போது அருகில் இருந்த மரத்திலிருந்த ஒரு கொக்கு அவர் தலையில் எச்சமிட்டது. அளவு கடந்த கோபத்தோடு கொக்கைப் பார்த்தார். என்ன வியப்பு! இவர் கண்ணிலிருந்து வெளிப்பட்ட கோபாக்கினி கொக்கை எரித்து சாம்பலாக்கியது. அதைக்கண்ட கவுசீகமுனிவர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். ஆஹா! நம் தவம் பலிக்கத் துவங்கி விட்டது' என்கிற வெற்றிக் களிப்புடன் ஊருக்குள் போனார்.
வயிற்றில் பசி நெருப்பு பற்றி எரிய ஒரு வீட்டிற்குப் போய் பிச்சை கேட்டார். அவ்வீட்டிலிருந்த பெண்மணி அவரை வணங்கி "இப்படித் திண்ணையில் அமருங்கள் சுவாமி! இதோ உணவு கொண்டு வருகிறேன்' என்று சொல்லிச் சென்றாள். அதே வேளையில் வெளியே சென்றிருந்த அவள் கணவன் வந்து விட அவனுக்குரிய பணிவிடைகளைச் செய்து விட்டு பின்னர் திண்ணையில் பசியுடன் காத்திருக்கும் முனிவரின் நினைவு வந்தவளாக உணவுடன் வாசலுக்கு ஓடிவந்தாள்.
மிகப்பெரும் தவசியான தன்னை அவமதித்து விட்டதாக வெகுண்டெழுந்த கவுசிகமுனிவர் அப்பெண்ணை எரித்து விடும் எண்ணத்தொடு நோக்கினார். அவளோ "என்ன.. கொக்கென்று நினைத்தீரோ கொங்கணவா" என்று அலட்சியமாகக் கேட்க,. கவுசிகமுனிவர் நடுங்கி ஒடுங்கிப் போய் விட்டார்.
ஆம்! தம் கோபாக்கினி அவளை ஒன்றும் செய்யாதது மட்டுமல்ல. காட்டில் கொக்கை எரித்ததும் அவளுக்குத் தெரிந்திருக்கிறதே! எப்படி? அவள் அமைதியாக பணிவுடன் சொன்னாள். "ஐயா! எனக்குக் கடவுள் என் கணவரே! அவருக்கான பணிவிடைகளைச் செய்தபின் தான், வேறு எச்செயலிலும் என்னால் ஈடுபட முடியும். நீர் பெரிய தபஸ்வியாக இருக்கலாம்.. ஆனால், எனக்கு என் இல்லறக் கடமைகளே முக்கியம். அதை விட்டு விட்டு வேறு எச்செயலிலும் என்னால் ஈடுபட இயலாது" என்று சொல்ல கவுசீகரும் கோபம் தணிந்து அமைதி அடைந்தார்.
காட்டில் ஊண் உறக்கமின்றி உடல் வருத்திச் செய்யும் தவத்தை விட தனக்குரிய இல்லறக் கடமைகளைச் செவ்வனே செய்பவர் தவம் வலியது என்பதை உணர்ந்தார். இன்னமும் சொல்லப் போனால் கடமைகளைச் செய்வதுதான் உண்மையான வழிபாடு. பிள்ளைகள், பெற்றோர் என்று குடும்பத்தைப் பேணாது செய்யப்படும் எந்த அறச்செயலும் பயன் தராது என்பதோடு , தத்தமது கடமையைச் செவ்வனே செய்பவர் துறவியரினும் மேலானவராக விளங்க முடியும் என்பதையே இம்மகாபாரதக்கதை நமக்கு உணர்த்துகிறது.
கற்ற கதையை பெற்ற பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்போமா? மீண்டும் பதிய கதையுடன் சந்திக்க இருப்பது,
-Ln. இந்திராதேவி முருகேசன், கோவை.
Comments