செங்கல் சூளைகளில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அதிரடி சோதனை!! - கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு!!

     -MMH


     கோவை தடாகம் பகுதியில்,25 செங்கல் சூளைகளில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அதிரடி சோதனை - கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு!!!!! -


     கோவை அருகே உள்ள தடாகம் பகுதியில் 300-க்கும் மேலான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கும், மற்ற மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. செங்கல் சூளை வைத்து நடத்தி வரும் உரிமையாளர்கள் சிலர் வரி ஏய்ப்பு செய்து உள்ளதாக ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.


     இதைத்தொடர்ந்து நேற்று காலை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் 60 பேர் கொண்ட குழுவினர் தடாகம் பகுதிக்கு சென்றனர். பின்னர் தனித்தனியாக பிரிந்து, வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் வந்த 25 செங்கல் சூளைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் பணிக்கு வந்த தொழிலாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும் செங்கல் சூளைகளில் இருந்து யாரும் வெளியே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை .


      இதேபோல் சாய்பாபாகாலனி, தொண்டாமுத்தூர் உள்பட பல இடங்களில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. உற்பத்தி செய்யப்பட்ட செங்கற்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும். ஆனால் ஜி.எஸ்.டி. செலுத்தாமலும், பல சூளைகள் பதிவு செய்யாமலும் நடத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. ஏற்கனவே செங்கல் சூளை தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தன. மாசுகட்டுப்பாட்டு வாரியம், கனிமம் மற்றும் புவியல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. இந்தநிலையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகளின் அதிரடி சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


      இந்த சோதனை குறித்து ஜி.எஸ்.டி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:"வரி ஏய்ப்பு தொடர்பான புகார்களை தொடர்ந்து 60 பேர் கொண்ட குழுவினர் செங்கல்சூளை மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதில் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தடாகம் பகுதியில் உள்ள 4 பெரிய செங்கல் சூளை மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பல சூளைகள் பதிவு செய்யப்படாமல் இயங்கி வந்ததும் கண்டறியப்பட்டது. பல கோடிகள் வரி ஏய்ப்பு மோசடி நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் ஆவணங்ள் ஆய்வு செய்யப்பட்டு ஜி.எஸ்.டி. வரியை வசூலிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments