கலப்பு திருமணம் செய்த மகனைத் தாக்கி மொட்டையடித்து அவமானப்படுத்திய விவகாரம்..!

       -MMH


         கலப்பு திருமணம் செய்த மகனைத் தாக்கி, மொட்டையடித்து அவமானப்படுத்திய தாய், சகோதரர், சகோதரி உட்பட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், சின்னமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த, வரதராஜ் மகன் அருள்குமார், 25; வாழப்பாடியில் பேக்கரியில் பணிபுரிந்தார்.


         தாண்டானுாரை சேர்ந்த, 17 வயது சிறுமி, வாழப்பாடியில் மளிகைக் கடையில் பணிபுரிந்தார். அருள்குமார், சிறுமி இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால், இருவீட்டு பெற்றோரும் எதிர்த்தனர். கடந்த ஜனவரியில் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், கலப்பு திருமணம் செய்து கொண்டனர். பிப்ரவரியில், சிறுமியின் பெற்றோர் புகார்படி, வாழப்பாடி போலீசார், கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர்.


         இந்நிலையில், அவர்கள், நாமக்கல், பள்ளிபாளையத்தில் இருப்பது, அருள்குமாரின் குடும்பத்தினருக்கு தெரிந்தது. குடும்பத்தினர் உட்பட ஏழு பேர், கடந்த, 23ல், அருள்குமாரை சின்னமநாயக்கன் பாளையத்துக்கு கடத்தி வந்து, தென்னை மட்டையால் தாக்கி, 'மொட்டை' அடித்து அவமானப்படுத்தினர். வாழப்பாடி போலீசார், அருள்குமாரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


           இது குறித்து, அருள்குமார் புகார்படி, தாய் அபிலா, 52, சகோதரி பரிமளா, 35, சகோதரர் நேரு, 32 மற்றும் உறவினர்கள் இருவர், கார் டிரைவர் ஆகிய ஆறு பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அருள்குமாரை திருமணம் செய்த சிறுமி, தற்போது, எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு, 18 வயது பூர்த்தியாகாததால், கடத்தல் வழக்கை, 'போக்சோ' வழக்காக, போலீசார் மாற்றியுள்ளனர். அருள்குமாரையும் கைது செய்ய, போலீசார் முடிவு செய்துள்ளனர்.


-சோலை, சேலம்.


Comments