குப்பை குட்டையாக மாறிவரும் குறிச்சி ஹவுஸிங் யூனிட்.!-நோய் பயத்தால் பீதியில் மக்கள்...

      -MMH


   தூய்மையான நகரம் என்பது இதுதானோ ?எங்களது குறிச்சி ஹவுஸிங் யூனிட் பேஸ் 2 பகுதியின் அவலநிலையை பாருங்கள். குப்பைத்தொட்டி இல்லாத பகுதி என்று பெருமை கொள்வதா ? அல்லது தெருவெங்கும் கொட்டிக்கிடக்கும் குப்பைகளுக்கு நடுவில் வாழ்வதா?   இது ஒரு எடுத்துக்காட்டு தான் இதுபோல எங்களுடைய குடியிருப்பு பகுதியில் கிட்டத்தட்ட 20 இடங்கள் இதே மாதிரி குப்பையுடன் இருக்கிறது சாலை எங்கும் முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன நாங்கள் மாநகராட்சி பகுதியில் வசிக்கிறோம் அல்லது ஏதாவது காட்டுக்குள் இருக்கிறோமா என்பதை எங்களுக்கு புரியவில்லை தயவு செய்து ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுத்து எங்கள் பகுதியை ஒரு சுத்தமான பகுதியாக மாற்றி கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


   இப்படிக்கு குடியிருப்போர் நல சங்கம் குறிச்சி ஹவுசிங் யூனிட் திட்டம் 2 நூறாவது வார்டு,


----- * மேற்கண்ட செய்தி குறிச்சி ஹவுஸிங் யூனிட், திட்டம் -2, குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் திரு. சந்திரசேகர் அவர்களிடமிருந்து வந்தது. நேரில் சென்று பார்த்தபோது உண்மையில் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.


  குறிச்சி ஹவுஸிங் யூனிட், திட்டம்-2 ஆனது 540 வீடுகளைக் கொண்ட முறையாக வரிகட்டி, அரசாங்கத்திற்கு அதிக வருவாய் (Revenue) ஈட்டித்தரும் ஒரு பகுதி. ஏற்கெனவே மெட்ரோ வாட்டர், பாதாள சாக்கடை என்று தோண்டிப் போடப்பட்ட, போக்குவரத்துக்குப் பயனற்ற சாலைகளால் ஊரைக்காலி செய்துவிடலாமா என்று மக்கள் வெறுத்துப் போயிருக்கும் வேளையில்தான் இந்த 'நித்திய கண்டம் பூரண ஆயுளாக' இந்தக் குப்பைப் பிரச்சனை.


  மட்கும், மட்காத குப்பை என்று பிரித்து வீட்டிலேயே வைத்திருந்து துப்புரவுப் பணியாளர்களால் அப்புறப் படுத்தப்பட்ட போதும் ஊர்முழுதும் குப்பைக்காடாக இருப்பதெப்படி?


"உங்கள் பகுதியைத் தூய்மைப்பகுதியாக அறிவித்திருக்கிறோம். குப்பையை வெளியே போட வேண்டிய அவசியமே இருக்காது" என்று சொல்லி இருந்த குப்பைத் தொட்டியையும் மாநகராட்சி துப்புரவாளர்கள் எடுத்துப் போய்விட்டதுதான் இதில் Highlight!


     சரி! குடியிருப்போர் யாரும் போடாத நிலையில் இக்குப்பைகள் எங்கிருந்துதான் வருகிறது? இதைத்தடுக்க சுகாதார ஆய்வாளர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? ஏற்கெனவே கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் போராடிவரும் இவ்வேளையில் இக்குப்பைக் காட்டிலிருந்து மாநகராட்சி இவர்களை மீட்குமா?


  குறிப்பு: இப்பகுதியின் துப்புரவுப் பொறுப்பாளரிடம் முறையிட்டால் அவர் பதில் இப்படி வருகிறதாம், "இந்தக் குப்பையெல்லாம் பக்கத்துக் கம்பெனிக்காரங்க போடறது. நீங்க போய் அவங்க கிட்டப் பேசுங்க. மினிஸ்டர் வார்டுல வேலை இருக்கு! நா அங்க போகனும்" --இது எப்படி இருக்கிறது?


  இந்தப் பகுதிகூட மினிஸ்டர் தொகுதியில்தான் இருக்கிறது என்பதை இவருக்கு யார் புரிய வைப்பது? சுகாதாரக்கேடு விளைவிக்கும் கம்பெனிக்காரர் மீது தக்க நடவடிக்கை எடுக்காமல் எங்களைப்போய் பேசச் சொல்வது என்ன நியாயம் என்று விழி பிதுங்கும் பொதுஜனத்தைப் பார்க்க உண்மையிலேயே பரிதாபமாகத்தான் இருக்கிறது!


என்ன செய்யப் போகிறது மாநகராட்சி நிர்வாகம்?


-Ln. இந்திராதேவி முருகேசன், கோவை.


Comments