கோவை ஆர்ய வைத்திய சாலை பார்மஸி தலைவர் கிருஷ்ணகுமார் கொரோனாவால் உயிரிழப்பு!!

     -MMH


     கோவை: பத்மஸ்ரீ விருது வென்ற கோவை ஆர்ய வைத்திய சாலை பார்மஸியின் தலைவர் கிருஷ்ணகுமார் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். கோவை ஆர்ய வைத்திய பார்மஸியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் கிருஷ்ணகுமார்,68. இவர், கேரளா சொர்னுார் ஆயுர்வேத கல்லூரியில் ஆயுர்வேதம் பயின்றவர். இந்திய அளவில் ஆயுர்வேத மருந்துகள், ஆயுர்வேத ஆராய்ச்சிகள், ஆயுர்வேத படிப்புகள் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கினார்.


    ஆயுர்வேத சிகிச்சையில் சிறந்து விளங்கியதற்காக, கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதுதவிர, பல்வேறு பல்கலைக்கழகங்கள் சார்பில் டாக்டர் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2015ல் இருந்து கோவை அவினாசிலிங்கம் பல்கலையின் வேந்தராகவும் இருந்து வருகிறார்.


   இந்நிலையில், இருதய கோளாறு காரணமாக 10 நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், நுரையீரலில் பிரச்னை இருந்ததை அடுத்து, அவினாசி ரோட்டில் பிரபல தனியார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.


   இதையடுத்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (செப்.,16) இரவு சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், டாக்டர்கள் மற்றும் தொழில்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


-Ln. இந்திராதேவி முருகேசன், கோவை.


Comments