குறைந்த நீரில் கொய்யா சாகுபடி!!

    -MMH


     உடுமலை:குறைந்த தண்ணீரில், நிலையான வருவாய் தரும், கொய்யா சாகுபடியில், ஈடுபட உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளுக்கு, பழநி ஆயக்குடி சுற்றுப்பகுதிகளில், இருந்து மட்டுமே கொய்யாக்காய் வரத்து இருந்தது. அங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அனுப்பப்பட்டு வந்தது.


     இந்நிலையில், உடுமலை பகுதியிலும், பரிசோதனை முறையில், வீரிய ஒட்டு ரக கொய்யா சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ளத்துவங்கினர்.இதில், நிலையான வருவாய் கிடைக்க, பரவலாக கொய்யா சாகுபடியில், உடுமலை பகுதி விவசாயிகள் ஈடுபட துவங்கியுள்ளனர்.தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில், சொட்டு நீர் பாசன முறை அமைத்து, அடர் நடவு முறையில் இது நடவு செய்யப்படுகிறது. விளைநிலங்களில், 3 மீ., இடைவெளியில் இதன் கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்கின்றனர்.


விவசாயிகள் கூறியதாவது: "அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி செய்வதால், பராமரிப்பு பணி வெகுவாக குறைகிறது. இரண்டு ஆண்டுகள் முறையாக பராமரித்தால், கூடுதல் மகசூல் கிடைக்கிறது. சந்தை வாய்ப்புகளும் எளிதாக உள்ளது.சில வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கே வந்து, இதை கொள்முதல் செய்து கொள்கின்றனர். சீதோஷ்ண நிலை மாற்றத்தால், சில நேரங்களில், மாவுப்பூச்சி உட்பட பூச்சி தாக்குதல் ஏற்படுகிறது."இவ்வாறு, தெரிவித்தனர்.


     தோட்டக்கலைத் துறையினர் கூறியதாவது: "நல்ல மண் பாங்கான இடம், சீரான தட்பவெப்பநிலை உள்ள பகுதியில் சாகுபடி செய்யப்படும் கொய்யா மிகுந்த சுவையுடன் இருக்கும். இதற்கு அதிக பராமரிப்பு தேவையில்லை. குறிப்பிட்ட அளவுக்கு மேல் செடிகளை உயரவிடாமல், ஆண்டுக்கு, 2 முறை கவாத்து செய்ய வேண்டும்.நடவு செய்து, 5 மாதங்கள் கழித்து பூக்கத் தொடங்கும் போது பூக்களை உதிர்த்துவிட வேண்டும். பூக்களை உதிர்ப்பதுடன், கவாத்தையும் முறையாகச் செய்தால்தான் மரங்கள் பருமனாக, தரத்துடன், பலமாக இருக்கும்." இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.


நாளையவரலாறு செய்திக்காக,


-முஹம்மது ஹனீப், திருப்பூர்.


Comments