கோவை அருகே நெடுஞ்சாலைத்துறை பெண் என்ஜினீயர் வீட்டில் கொள்ளை முயற்சி!! - மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு!

      -MMH


   சூலூர் அருகே, நெடுஞ்சாலைத்துறை பெண் என்ஜினீயர் வீட்டில் கொள்ளை முயற்சி - மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு! கோவை சூலூரை அடுத்த காங்கயம்பாளையம் காமராஜ் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 40). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பிரதீபா (32). இவர் நெடுஞ்சாலைத்துறையில் உதவி என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.


   இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பிரதீபாவுக்கு சென்னையில் பணி மாறுதல் ஆனதாக தெரிகிறது. இதனால் ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களது வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.


   வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள் நேற்று முன்தினம் இரவு பெண் அதிகாரியின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பிறகு வீட்டில் உள்ள 2 பீரோக்களை உடைத்து உள்ளே பணம் மற்றும் நகை ஏதாவது உள்ளதா என தேடி பார்த்துள்ளனர்.


   ஆனால் வீட்டில் பணம் இல்லாததால் கொள்ளை அடிக்க வந்த மர்ம ஆசாமிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை பிரதீபா வீட்டின் போலீசாருக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் தகவல் கொடுத்தனர்.


   போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் ராஜ்குமாரிடம் போலீசார் போனில் பேசினர்.


   அப்போது வீட்டில் பணம், நகை எதுவும் வைக்கவில்லை என்று தெரிவித்தார். ஆனாலும் ராஜ்குமார் கோவை வந்த பிறகு தான் வீட்டில் வைக்கப்பட்டிருந்த வேறு ஏதேனும் பொருட்கள் காணாமல் போய் உள்ளதா என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


   இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர். சூலூர் பகுதிகளில் இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபட்ட டவுசர் கொள்ளையர்களை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.


   இந்த நிலையில் மீண்டும் நெடுஞ்சாலைத்துறை பெண் அதிகாரி வீட்டில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது அந்த பகுதி பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.


   எனவே இரவு போலீசார் நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments