மதுரை-போடி அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம்!!

     -MMH


     மதுரை-போடி ரயில்பாதை பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளதால் விரைவில் சோதனை ஓட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.


     மதுரையிலிருந்து தேனி மாவட்டம் போடி வரையில் மீட்டா் கேஜ் பாதையாக இருந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற கடந்த 2009 ஆம் ஆண்டு அரசு முடிவு செய்தது. இதனையடுத்து இந்த வழித்தடத்தில் இயங்கி வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன.


     அகல ரயில் பாதை பணிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் மந்தமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் 11 ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள் தற்போது முடியும் நிலையில் உள்ளன.     முதற்கட்டமாக கடந்த ஆண்டு மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்பின்னா் உசிலம்பட்டியில் இருந்து தேனி வரையிலான பணிகள் வேகமாக நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளன. இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையில் தண்டவாளங்களை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. இதற்காக ஜல்லிக்கற்கள் ஏற்றப்பட்ட


     ரயில் இயக்கப்பட்டது. இதன்மூலம் மதுரையில் இருந்து தேனி வரையிலான ரயில்பாதை பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.


     இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறியதாவது: "மதுரையில் இருந்து தேனி வரையிலான சுமாா் 60 கிலோ மீட்டா் அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்துள்ளதால், மிக விரைவில் சோதனை ரயில் ஓட்டம் நடத்தப்பட்டு, இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மதுரை-தேனி வரையில் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படும்" என்றனா்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-ஆசிக்,தேனி.


Comments