வர்த்தக நிறுவனங்களில் திடீர் ஆய்வு! கோவையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை!!

     -MMH


      கோவை:கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கோவை மாநகராட்சி அதிகாரிகள் குழுவினர், வர்த்தக நிறுவனங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, விதிமுறையை பின்பற்றாத கடைகளுக்கு, அபராதம் விதித்தனர்.


     பண்டிகை காலம் என்பதால், கோவை நகர வர்த்தக பகுதிகளில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. சமூக இடைவெளி பின்பற்றுவது,முக கவசம் அணிவது உள்ளிட்ட நடவடிக்கைகளை பலரும் பின்பற்றுவதில்லை. அதனால், மீண்டும் தொற்று பரவ வாய்ப்பிருப்பதால், மாநகராட்சி அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரித்து, வர்த்தக நிறுவனங்களில் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர்.கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தலைமையில், மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், ஒப்பணக்கார வீதியில் உள்ள கடைகளுக்கு சென்றனர்.நுழைவாயிலில் கிருமி நாசினி வழங்க வேண்டும்.


     வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடை ஊழியர்கள் அனைவரும் முக கவசம், கையுறை அணிந்து பணிபுரிய வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றுவது உள்ளிட்ட தொற்று பரவல் நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை, கடைகளில் ஒலிபரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என, கமிஷனர் அறிவுறுத்தினார்.இதேபோல், நகர் நல அலுவலர் ராஜா தலைமையில், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரசேகர், ஆண்டியப்பன் ஆகியோர் கிராஸ்கட் ரோட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். விதிமுறையை கடைபிடிக்காத, 40 கடைகளில், 31 ஆயிரத்து, 800 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.


-சோலை, சேலம்.


Comments