சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் 14 நாள் புத்தாக்கப் பயிலரங்கம் தொடக்கம்!

     -MMH


சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ-மாணவியருக்கான 14 நாள் புத்தாக்கப் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கியது.


பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் (பி.இ) பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவ-மாணவியருக்கு புத்தாக்க பயிலரங்கினை நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.


பட்டப்படிப்பு மீதான தெளிவான புரிதலை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையிலும், உயர்கல்வி வாய்ப்பு, வேலைவாய்ப்புத் திறன் குறித்தும் இந்த புத்தாக்க பயிலரங்கம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கரோனா பேரிடர் காலம் என்பதால் நடப்பாண்டில் இந்தப் பயிலரங்கம் இணையவழியில் நடைபெறுகிறது.
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் சி.வசந்தநாயகி புத்தாக்கப் பயிலரங்கினை தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர்,


கரோனா நோய்த் தொற்று கல்வித்துறையின் அனைத்து செயல்பாடுகளையும் மாற்றியமைத்துள்ளது. கால மாற்றத்திற்கேற்ப கல்வி கற்பிக்கும் முறையும் மாறியுள்ளது. இந்த மாற்றத்தை மாணவ-மாணவியர் முழுமையாகப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் தங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசின் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணற்ற பல்வேறு திட்டங்களையும், சர்வதேச தரத்திலான ஆய்வகங்களையும் அமைத்துள்ளது.


சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு கணினி அறிவியல் மாணவர், அண்மையில் நடைபெற்ற 2}ம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான மென்பொருளை வடிவமைத்துள்ளார். இதுபோல தங்களுக்கான வாய்ப்புகளை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.


இந்நிகழ்ச்சியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான முதன்மை தலைமை ஆலோசகர் வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.பிரகாஷ், முதல்வரின் நேர்முக உதவியாளர் கே.அறிவழகன்,காசாளர் பி.அழகுமுடிராஜன், ஒருங்கிணைப்பாளர் உதவிப் பேராசிரியர் கே.பூர்ணிமா, துணை ஒருங்கிணைப்பாளர்கள் உதவிப் பேராசிரியர்கள் கே.சரண்யா, ஏ.ராமச்சந்திரன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


-சோலை, சேலம்.


Comments