2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து 2 மனித உடல்கள் கண்டுபிடிப்பு!

-MMH

2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!

ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் பேரரசின் பாம்பீ நகரத்தை அழித்த, எரிமலைச் சீற்றத்தில் இறந்த, இரண்டு மனிதர்களின் உடல்களை இத்தாலியிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்கள் எரிமலை வெடித்துச் சிதறியபோது தஞ்சமடைய இடம் தேடி இருக்கலாமென்றும் அப்போது, எரிமலைக் குழம்பால் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி 79-ல் வெசுவியஸ் என்ற எரிமலையின் சீற்றத்தால் மொத்த பாம்பீ நகரமும் மூழ்கியது.

இந்த எரிமலைச் சீற்றம் பாம்பீ நகரத்தையும் அங்கு குடியிருந்தவர்களையும் சாம்பலில் புதைத்துவிட்டது. தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இடம், ஆய்வு செய்வதற்கான ஒரு வளமான ஆதாரமாக மாறி இருக்கிறது.

இந்த மாதம், பண்டைய பாம்பீ நகரத்தின் புறநகரில் ஒரு பெரிய மாளிகை போன்றதொரு வீட்டை அகழ்வாராய்ச்சி செய்த போதுதான், இந்த இரண்டு எச்சங்களையும் கண்டெடுத்துள்ளனர். புதைந்துபோன அந்தச் செல்வந்தர் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மற்றொரு மனிதரின் வயது 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டதாக இருக்கலாம் என்று தொல்பொருள் தள அதிகாரிகள் தெரிவித்தனர்.

- பாரூக் சிவகங்கை.

Comments