ஜூவல்லரி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை! கணக்கில் வராத 814 கிலோ தங்கம்...!

      -MMH


ஜூவல்லரி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 500 கோடி ரூபாய் கணக்கில் வராத ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் வராத 400 கோடி ரூபாய் மதிப்பிலான 814 கிலோ தங்க நகைகளும் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.


சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட 32 இடங்களில் கடந்த 10ம் தேதி வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், நகைக்கடை குழுமத்தில் வருமானவரித்துறையினர் நடத்திய இந்த சோதனையில் 500 கோடி ரூபாய் கணக்கில் வராத,ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. சென்னைசவுகார்பேட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த மோகன்லால் ஜூவல்லர்ஸ் மற்றும் அதனை சார்ந்த 32 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


குறிப்பாக 400 கோடி ரூபாய் மதிப்பிலான 814 கிலோ தங்க நகைகள் வைத்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 32 இடங்களிலும் கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் 500 கோடி ரூபாய் வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 150 கோடி கணக்கில் காட்டாமல் வருவாயை மறைத்திருப்பதும் விசாரணையில் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுமட்டுமின்று தொழில் சாரா முதலீட்டில் ஈடுபட்டு லாபத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை இன்னும் நிறைவடையவில்லை. இன்று மாலைக்குள் சோதனை நிறைவடைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இதையடுத்து, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கணக்கிடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சோதனையின் முடிவில் நகைக்கடை உரிமையாளர்கள், நிர்வாகிகளுக்கு சம்மன் அளித்து நேரில் விசாரணை மேற்கொள்ளவும் வருமானவரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


-ஸ்டார் வெங்கட்.


Comments