திருப்பூரில் தீபாவளி காற்று மாசு இருக்குமா❔❔மாசுகட்டுப்பாடு வாரிய ஆய்வு துவக்கம்!!

     -MMH


திருப்பூர்:திருப்பூரில், நேற்று முதல், பண்டிகை கால காற்று மாசு ஆய்வு துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, இரண்டு இடங்களில், காற்று மாசு அளவிடும் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.தீபாவளிக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. அனைத்து நகரங்களிலும், தீபாவளிக்கு முன், பின் காற்று மாசு ஆய்வு நடத்த மாசுகட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.


அதன்படி, திருப்பூரில், நேற்று முதல் மாசுகட்டுப்பாடு வாரியம் காற்று மாசு ஆய்வை துவக்கியுள்ளது.திருப்பூரில், மாசுகட்டுப்பாடு வாரிய வடக்கு பொறியாளர் அலுவலகம் அமைந்துள்ள குமரன் வணிக வளாகம்; ராயபுரத்தில் மாசுகட்டுப்பாடு வாரிய பறக்கும்படை அலுவலகங்களில், 'ஆப்பியன் ஏர் குவாலிட்டி மெஷர்மென்ட்' என்கிற கருவி வைக்கப்பட்டுள்ளது.


மாசுகட்டுப்பாடு வாரிய ஆய்வக துணை தலைமை விஞ்ஞான அலுவலர் கலைச்செல்வி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், காற்று மாசு கருவியை நிறுவி, கண்காணித்து வருகின்றனர்.


மாசுகட்டுப்பாடு வாரிய துணை தலைமை விஞ்ஞான அலுவலர் கலைச்செல்வி கூறியதாவது:


தீபாவளி காற்று மாசு குறித்த ஆய்வுகள் திருப்பூரில் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, இரண்டு இடங்களில் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. கருவியில் வைக்கப்பட்டுள்ள பில்டர் பேப்பரில், காற்று மாசு அளவுகள் பதிவு செய்யப்படும். எட்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, பில்டர் பேப்பர் மாற்றப்படும்.


தினமும் காலை, 6:00 முதல் மதியம், 2:00 மணி; மதியம், 2:00 முதல் இரவு, 10:00 மணி; இரவு, 10:00 முதல் மறுநாள் காலை, 6:00 மணி என்கிற அடிப்படையில், காற்று மாசு அளவிடப்படும்.வரும், 9ம் தேதி மற்றும் பண்டிகை நாளான 14ம் தேதிகளில் மட்டும், ஒலி மாசு அளவிடப்படும். காற்று மாசு, வரும் 21ம் தேதி வரை அளவிடப்படும்.


பண்டிகைக்கு முன், பண்டிகை நாள் காற்று மாசு அளவீடுகள் மதிப்பிடப்பட்டு, வாரிய தலைமைக்கு அனுப்பிவைக்கப்படும்.தீபாவளி நாட்களில், திருப்பூரில் காற்று, ஒலி மாசு அளவு, சீராக உள்ளதா; எல்லை மீறுகிறதா என்கிற விவரம், ஆய்வின் முடிவில் தெரியவரும்.இவ்வாறு, அவர் கூறினார்.


நாளையவரலாறு செய்திக்காக, 


-முஹம்மதுஹனீப்,திருப்பூர்.


Comments