கொப்பரை விலை நிலையாக தொடருமா⁉விவசாயிகள் காத்திருப்பு!!

     -MMH


         உடுமலை:கொப்பரையின் விலை சரியாமல், நிலையாக இருந்தால், தேங்காய் உற்பத்தி குறைவு ஏற்படும் நஷ்டம் தவிர்க்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.


          உடுமலை சுற்றுப்பகுதியில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. உற்பத்தியாகும் தேங்காய்களுக்கு கொப்பரை வர்த்தகம் அடிப்படையில், விலை நிர்ணயிக்கப்படுகிறது.தற்போது, விளைநிலங்களில் உலர் களங்கள் அமைத்து, விவசாயிகளும், வியாபாரிகளும், கொப்பரை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.


         கொப்பரை வர்த்தகத்துக்கு, முக்கிய மையமாக காங்கேயம் உள்ளது. இந்நிலையில், வரத்து குறைவு, உற்பத்தி பாதிப்பு உட்பட காரணங்களால், இதன் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து காணப்பட்டது.கொப்பரை கிலோவுக்கு, நுாறு ரூபாயை தாண்டிய விலை, நேற்றைய நிலவரப்படி, அதிகபட்சமாக, 120 ரூபாய் வரை இருந்தது.


         வழக்கமாக, அக்., நவ., மாதங்களில், தேங்காய் உற்பத்தி குறைவாக இருக்கும். எனவே, இதன் விலை உயர்வு விவசாயிகளுக்கு ஆறுதலாக இருக்கிறது.விவசாயிகள் கூறுகையில், 'கடந்த இரு மாதங்களாக, தேங்காய் உற்பத்தி பாதியாக குறைந்து விட்டது. வெள்ளை ஈ தாக்குதல் உட்பட காரணங்களால், பராமரிப்பு செலவும் கூடுதலாகியுள்ளது.


         எனவே, கொப்பரை விலை சரியாமல் நிலையாக இருந்தால், நஷ்டத்தை தவிர்க்கலாம்,' என்றனர்.வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கியுள்ள நிலையில், கொப்பரை உற்பத்தி செய்வது குறையும்; விலையில் மாற்றம் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.


நாளையவரலாறு செய்திக்காக,


-முஹம்மதுஹனீப்,திருப்பூர்.


Comments