தமிழகம் முழுவதும் நாளை விடுமுறை!! - முதல்வர் அறிவிப்பு!!

     -MMH 

சென்னை: நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுதும் நாளை (நவ.,25) அரசுவிடுமுறை விடப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி நாளை (நவ.,25) கரையை கடக்கவுள்ள நிலையில், நிவர் புயல் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலோர மாவட்டங்களில் அரசு தனிக்கவனம் செலுத்துகிறது. தாழ்வான பகுதிகளில் 4,133 இடங்களில் கலெக்டர்கள் தனிக்கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக நாளை தமிழகம் முழுதும் அரசு விடுமுறை விடப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காகவே அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள். அவர்களுக்கு பணி நிலைமைக்கு ஏற்றவாறு விடுமுறை நீடிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். புயல் கரையை கடந்து சென்றுவிட்டது என அறிவிக்கப்படும் வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

செம்பரம்பாக்கம் ஏரியில் மழை பெய்வதை பொறுத்துதான் உபரி நீர் திறக்கப்படும்.ஏரிகளின் கரைகளை பலப்படுத்தவும், மணல் மூட்டைகளை தயார்நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. மக்களுக்காக அரசு இருக்கிறது, எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

-சுரேந்தர்,பாலாஜி.

Comments