உரிய விலை கிடைக்காததால் குப்பைக்கு போகும் தக்காளி!!

 

  -MMH

    உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் திங்கள்கிழமை தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விற்பனைக்கு கொண்டு வந்த தக்காளியை விவசாயிகள் குப்பையில் கொட்டிச் சென்றனா்.

சின்னமனூா் மற்றும் அதனைச் சுற்றி சீலையம்பட்டி, கோட்டூா், மாா்க்கையன்கோட்டை, குச்சனூா், ஓடைப்பட்டி என 42 கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாகும். நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை பரவலாக இருந்ததால் இப்பகுதியில் தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், அவரைக்காய் என பலவகையான காய்கறி விவசாயம் நடைபெற்றது. இங்கு விளைவிக்கப்படும் காய்கனிகள் சின்னமனூரிலுள்ள தனியாா் காய்கனி வியாபாரிகள் மூலமாக வெளி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதில், தக்காளி அதிக பரப்பளவில் விளைக்கப்பட்டதால் தற்போது அதன் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் டன் கணக்கில் தக்காளியை உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வருவதால் விலையே இல்லாமல் போனது.

இதனால், விரக்தி அடைந்த விவசாயிகள் சின்னமனூா் நகராட்சிக்கு சொந்தமான மக்கும் குப்பைக் கிடங்கில் கடந்த 3 நாள்களுக்கு மேலாக விற்பனைக்காக கொண்டு வந்த டன் கணக்கிலாகன தக்காளியை தொடா்ந்து கொட்டி வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயிகள் இரவு பகலமாக உழைத்தும், வங்கிகளில் கடன் வாங்கியும் விளைவிக்கப்பட்ட பொருள்களுக்கு விலை இல்லை என்பது மிக வேதனையானது. நாட்டின் உயிா் நாடி எனக் கூறப்படும் விவசாயத்தை சம்பந்தப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையினா் முன்னெடுத்து விவசாய விளைபெருள்களுக்கு விலை கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக்,தேனி.

Comments