நேர்மையாக பணியாற்றிய காவல்துறை அதிகாரியின் சோக நிலை!!
இந்த உலகில் யார் எப்படி வேண்டும் என்றாலும் வாழலாம் என்ற நிலையில், நேர்மையாகவே வாழ்ந்து, மக்களுக்கு சேவை செய்த அதிகாரிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். காரணம், எங்கும் ஊழல், முறைகேடு என திரும்பிய திசை எங்கும் நேர்மையற்றவர்களின் கூட்டத்தின் ஆட்டமே அதிகமாக உள்ளது. இந்த நிலையில், நேர்மையாக வாழ்ந்த ஒரு அதிகாரியின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட சோக வடுக்களை விவரிக்கிறது இந்த செய்தி.
மத்திய பிரேதச மாநிலத்தில் பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகளான ரத்னேஷ் சிங் மற்றும் விஜய் படோரியா ஆகியோர் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாலையில் கந்தல் உடை, நீண்ட தாடி, கசங்கிய கண்கள், தலைவிரிந்த கோலத்தில் முடிகள் என வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு நபரைப் பார்த்தும் அவர்களது மனம் ரெம்பவே உருகிவிட்டது.
இதனால், அந்த நபருக்கு உணவு மற்றும் உடைகளை வாங்கி கொடுத்து விட்டு, அந்த இடத்தைவிட்டு நகர்ந்துள்ளனர். அப்போது, தங்களது பெயரைச் சொல்லி யாரோ அழைப்பதை கேட்டு, சுற்றும் முற்றும் பார்த்துள்ளனர். ஆனால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் தெரியவில்லை. அந்த பிச்சைக்காரரைத் தவிர. பின்புதான் தெரிந்தது அந்த பிச்சைக்காரர் தங்கள் பெயரைச் சொல்லி அழைத்தது என.
உடனே அவரிடம் சென்ற அந்த காவல்துறை அதிகாரிகள், அவரைப் பற்றி விசாரித்தபோது பதறிப்போனார்கள். காரணம், அவர் பெயர் மனிஷ் மிஸ்ரா. நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். அதுமட்டுமல்ல, ரத்னேஷ் சிங் மற்றும் விஜய் படோரியாவுக்கே அவர்தான் குருநாதர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மனிஷ் மிஸ்ரா, எப்படி இப்படி ஆனார் என அவர்களுக்கு புரியாத புதிராகவே இருந்தது. இதனையடுத்து, இது தொடர்பாக தங்கள் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டு, டாக்டரிகளின் உதவியோடு, அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அப்போதுதான் தெரிந்தது, மனிஷ் மிஸ்ரா ஏற்கனவே மருத்துவ சிகிச்சையின் போது தப்பி வந்தது. இதனையடுத்து, அவருக்கு உரிய பாதுகாப்பு மற்றும் முறையான சிகிச்சை கிடைக்க வழி செய்து கொடுத்தனர்."காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"
என்ற திருவள்ளுவர் வாக்குப்படி வாழ்ந்து காட்டியுள்ளனர், அந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள்.
-ஸ்டார் வெங்கட்.
Comments