சிமென்ட் விலை அதிகரிப்பு கட்டுமான துறையினர் அதிர்ச்சி...!

-MMH

சிமென்ட் விலை, திடீரென மூட்டைக்கு, 30 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதால், கட்டுமான துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஊரடங்கு காலத்தில், கட்டுமான பணிகள் முற்றிலுமாக முடங்கின. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கும் நிலையில், சிமென்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த சிமென்ட் நிறுவனங்கள், 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை விலையில், 60 முதல், 100 ரூபாய் வரை உயர்த்தினர்.

ஜூன் மாதம் ஏற்பட்ட இந்த விலை உயர்வால்,கட்டுமான பணிகள் துவங்குவது தாமதமானது. பண்டிகை காலம் முடிந்த நிலையில், கட்டுமான பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள இத்துறையினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், தற்போது மீண்டும் சிமென்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.ராமபிரபு கூறியதாவது: 

தமிழகத்தைச் சேர்ந்த சிமென்ட் நிறுவனங்கள், எவ்வித அடிப்படை காரணமும் இன்றி விலையை உயர்த்தி வருகின்றன. மூட்டைக்கு, 60 ரூபாய் உயர்த்தப்பட்ட சில மாதங்களில், மீண்டும் மூட்டைக்கு, 30 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் கட்டுமான நிறுவனங்களும், வீடு கட்ட நினைக்கும் பொது மக்களும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.விலை உயர்வால், 410 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை சிமென்ட், தற்போது, 440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இது குறித்து தமிழக அரசும், மத்திய அரசும் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

-ஒற்றன்.

Comments