பண்பாடு காத்து நிற்கும் மக்கள்!! - மேம்பாட்டு பணிகள் அவசியம்!!

                              -MMH

     ''நிகழ்வுகளை விட, அந்த நிகழ்வுகளால் பதிந்திருக்கும் நினைவுகளே என்றென்றும் நிலைத்திருக்கும் பொக்கிஷங்கள். இப்படி பண்பாடும், கலாச்சாரமும் நிலைத்திருக்கும் தமிழ்நிலத்தில் ஒவ்வொரு பகுதியும் அளப்பரிய பெருமைகளை கொண்ட அரிய பொக்கிஷமாக திகழ்கிறது. இந்த பகுதிகள் குறித்து நாம் அறிந்த, அறியாத தகவல்களை நினைவலைகளில் சுழல வைப்பதற்காக வருகிறது.

இந்த 'பிளாஷ்பேக்,'' நாமக்கல் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் முதன்மையானது கொல்லிமலை. கடல்மட்டத்திலிருந்து 1000 முதல் 1600 அடி உயரம் வரை கொண்ட கொல்லிமலை, வடக்கு தெற்காக 28 கிலோ மீட்டர் பரப்பளவும், கிழக்கு மேற்காக 19கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்டது.

மலைப்பாதையின் தூரம் 26கிலோ மீட்டர். அடிவாரத்தில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்தால் கொல்லிமலை குளிர்சாரலில் மனது தொலைகிறது. கிழக்கு தொடர்ச்சி மலையின் கடைசி மலையாக திகழும் கொல்லிமலை, வரலாற்று சிறப்புகளிலும் இதர மலைகளை விஞ்சி நிற்கிறது. 

ராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்த மதுவனம் என்னும் மலைப்பிரதேசம் இந்த கொல்லிமலைதான் என்று இதிகாசங்கள் கூறுகிறது. பழந்தமிழ் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு போன்றவற்றில் கொல்லிமலையை பற்றிய குறிப்புகள் உள்ளது.

சதுரமான குன்றுகள் நிறைந்திருப்பதால் சதுரகிரி என்று அழைக்கப்பட்டு, தவம் செய்வதற்கும், தனித்து வாழ்வதற்கும் தகுதியான இடமாக விளங்கியது. இதன்காரணமாகவே காலங்கி முனிவர் முதலான பதினெண் சித்தர்கள் இங்குள்ள குகைளில் தங்கி தவம் செய்தனர் என்றும் கூறப்படுகிறது. இந்த மலையையும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களையும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில்ஓரி ஆட்சி செய்தார். 

ஒரு கட்டத்தில் பெருஞ்சேரல் இரும்பொறை, மலையமான் திருமுடிக்காரியின் படைகளுடன் வந்து வல்வில்ஓரியை வீழ்த்தி இறக்கச் செய்து, கொல்லிமலையை ஆக்கிரமித்தான். ஆனால் மக்கள் ஒன்று திரண்டு படைகளை அடித்து துரத்தினர். ஓரியின் படைத்தலைவன் பிட்டன் கொற்றனிடம் ஆட்சியை கொடுத்தனர் என்றும் அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அடுத்தடுத்த காலங்களில் பிட்டனின் வம்சாவழிகளாகன பழங்குடியின மக்களின் தலைவர்களே கொல்லிமலையின் ஆட்சியை நிர்வாகித்துள்ளனர்.1842ம் ஆண்டுக்கு வாக்கில் சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கொல்லிமலையை, ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆலாத்தூர்நாடு, அரியூர்நாடு, பைல்நாடு, தேவனூர்நாடு, எடப்புலிநாடு, குண்டூர்நாடு, குண்டினிநாடு, பெரியகரைநாடு, செல்லூர்நாடு, சித்தூர்நாடு, தின்னனூர்நாடு, திருப்புலி நாடு, வல்லப்பூர்நாடு, வாழவந்திநாடு என்று 14 ஊராட்சிகளை கொண்ட ஒன்றியமாக தற்போது கொல்லிமலை உள்ளது. சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் இடம் பெற்றிருந்தாலும் இது, மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி என்பது பெருமைக்குரியது.

1957ம் ஆண்டு முதல் தற்போது வரை சிவஞானம், பெரியண்ணன், எ.எஸ்.கவுண்டர், சின்னவெள்ளையகவுண்டர், வி.சின்னசாமி, சிவபிரகாசம், கே.சின்னசாமி, கலாவதி, பொன்னுசாமி, சாந்திராஜமாணிக்கம், சந்திரசேகரன் ஆகியோரது குரல் சட்டமன்றத்தில் ஒலித்துள்ளது. ஆனாலும் அடிப்படை கட்டமைப்புகள், மேம்பாட்டு வசதிகள் இல்லாத பகுதியாகவே கொல்லிமலை விளங்குகிறது.

 வசதி வாய்ப்புகள் நிறைந்த நவீனவாழ்க்கையை எளிதாக வாழ்வதற்கான வாய்ப்புகளும், திறனும் இங்குள்ள மக்களுக்கு அதிகளவில் உள்ளது. ஆனாலும் பாரம்பரியம் மாறாமல் பண்பாடு காத்து நின்று இயற்கையை நேசித்து வாழ்வதில் தான், பெருமிதம் கொள்கின்றனர். எனவே அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கான மேம்பாட்டு திட்டங்களை அரசு முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அறம் வளர்த்த அறப்பளீஸ்வரர்:

தர்மத்தை (அறம்) பின்பற்றிய சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் அருள்பாலிக்கும் திருத்தலம் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில். கோயில் குளத்தில் குதித்த மீனை பிடித்த ஒருவர் அறுத்து சமைத்துள்ளார். குழம்பில் இருந்து அந்த மீன் துள்ளிக்குதித்து ஓடியது. இது உயிர்களின் மேன்மைகாத்து அறம் வளர்த்த ஈசனின் திருவிளையாடல். அம்பலவாண கவிராயர், அறப்பளீஸ்வரர் சாதகம் என்ற நூலில் இதை குறிப்பிட்டுள்ளார். கொல்லிகுளிர் அறைப்பள்ளி என்றும், கள்ளால் கமழ்கொல்லி அறைப்பள்ளி என்றும் திருநாவுக்கரசர் தனது பாடல்களில் அறப்பளீஸ்வரரரை போற்றியுள்ளார்.

திகிலூட்டும் சித்தர் குகை:

கொல்லிமலையில் ஏராளமான குகைகள் உள்ளது. இதில் கோரக்கர் குகை, புலிப்பாணி குகை, அகத்தியர் குகை, அவ்வையார் குகை, பாம்பாட்டி சித்தர்குகை போன்றவற்றில் சித்தர்கள் இன்றும் அருவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கையும் திகிலூட்டிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் அரிய மூலிகைகளின் வாசம் பரப்பி மனித நோய்களை கொல்லும் மலையாக இது இருக்கிறது என்று பெருமிதம் கொள்கின்றனர் சித்தமருத்துவ வல்லுநர்கள்.

நமரம் என்னும் வி.ஐ.பி.,வாழை:

கொல்லிமலை ஒன்றியத்திலுள்ள 14 ஊராட்சிகளிலும் மிளகு ,காபி , மலைவாழை அன்னாசி பலாப்பழம் கமலா ஆரஞ்சு கொய்யா உள்ளிட்டவை அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது இதில் கொல்லிமலையில் விளையக்கூடிய நமரம் மலைவாழை மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்கு விஐபி வாழைப்பழம் என்ற பெயரும் உண்டு. பண்ருட்டி, கேரளாவை விட கொல்லிமலை பலாப்பழங்கள் தனி சுவை கொண்டவை. மிளகுக்கு பிரசித்தி பெற்ற கொல்லிமலையில் எடுக்கப்படும் கொம்புத்தேன் பல வியாதிகளுக்கு மருந்தாக அமைகிறது என்பதும் சிறப்பு.

அசர வைக்கும் ஆகாய கங்கை:

கொல்லிமலையின் அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது ஆகாய கங்கை அருவி. இரண்டாயிரம் மீட்டர் உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் ஆர்ப்பரித்து கொட்டி அசரவைக்கிறது. இது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சியின் புளியஞ்சோலை ஆற்றில் கலக்கிறது. சுவேதா நதி, கோம்பையாறு, அய்யாறு, கூட்டாறு, கருவோட்டாறு, பஞ்சநதி போன்றவை கொல்லிமலையில் இருந்து உற்பத்தியாகி, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஏரிகளுக்கு நீர்வார்த்து நிறைவாக காவிரியில் கலக்கிறது.

வளைவுகளை குறைத்து சாலை விரிவு அவசியம்:

''கொல்லிமலையை சிறந்த சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும். இதற்கு அடிவாரத்திலிருந்து வரும் 70 கொண்டை ஊசி வளைவுகளை குறைத்து, சாலையை அகலப்படுத்த வேண்டும். தாவரவியல் பூங்கா, காட்சி முனையங்கள் ஆகியவற்றை சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். சுற்றுலாத் துறைக்கு சொந்தமான தமிழ்நாடு விடுதியை ஏற்படுத்த வேண்டும். 

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு 3ஆயிரம் படிக்கட்டுகளை கடந்து செல்ல முதியவர்களும், புதியவர்களும் தயக்கம் காட்டுகின்றனர். அங்கு செல்வதற்கு ரோப் கார் வசதி செய்தால் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,'' என்கிறார் கொல்லிமலையை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி.

மிரள வைக்கிறார் மாசிபெரியண்ணன்:

மாசிக் குன்றுதான் கொல்லிமலைத் தொடரில் மிகவும் உயர்ந்த மலைப்பகுதி. இங்கிருக்கும் மாசிபெரியசாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. மாசிக் குன்றில் வாழம்புல்லால் அமைத்த சிறிய கூரைக் கட்டிடத்தில், வேங்கை வாகனத்தில் அமர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கிறார் மாசி ெபரியண்ணன் சுவாமி. 

பாதை நெடுக முட்புதர்களும் பாறைக்கற்களும், நிறைந்ததுள்ள செங்குத்தான மலைப்பாதையில் சற்று சிரமப்பட்டு நடந்து சென்றால் தான் இந்த கோயிலை அடைய முடியும். இப்படி மிரள வைத்தாலும் மலை உச்சியை அடையும் போது வீசும் குளிர்காற்று, நமது களைப்பை தன்னோடு இழுத்துக் கொள்கிறது என்று சிலிர்க்கின்றர் பக்தர்கள்.

வல்வில்ஓரி ஆண்டபூமி:

கொல்லிமலையை ஆண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில்ஓரியின் இயற்பெயர் ஆதன். வில் எறிவதில் வித்தகனாக திகழ்ந்த ஓரி, ஒரே அம்பில் யானை, புலியின்வாய், மானின் உடல், காட்டுப்பன்றி, உடும்பின் தலை போன்றவற்றை துளையிட்டதால் வல்வில்லாளன் என்று அழைக்கப்பட்டான்.

 ஓரி என்பதற்கு தேனின் முதிர்ந்த நிறம் என்று பொருள். இந்த நிறமுடைய குதிரையை ஓரி வைத்திருந்ததால் பெயருடன் ஓரியும் சேர்ந்து கொண்டது. வல்வில்லாளன் ஓரி என்ற பெயரே வல்வில் ஓரியாக மருவி நிற்கிறது.

-சுரேந்தர்.

Comments