உடல் சூட்டிற்கு எளிய வழி முளைக்கீரை..!
கீரைகளில் முளைக்கீரை தனித்துவமானது. சாதாரணமாக தெருக்களில் கூட கிடைக்கக்கூடியது. வீட்டிலும் வளர்க்கலாம். முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதுதவிர, நார்ச்சத்து, மாவுச்சத்து குறிப்பிடும் அளவுகளில் இருப்பதால், உடல் வலுவடைய உதவுகிறது. வளரும் சிறுவர்களுக்கு இந்தக் கீரையைத் தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி உண்டாகும்.
கீரையில் உள்ள இரும்பு மற்றும் தாமிரச்சத்துக்கள் ரத்தத்தைச் சுத்தம் செய்வதோடு, மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது. முளைக்கீரையுடன் அதிமதுரம் (ஒரு துண்டு), மஞ்சள் (3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.
முளைக்கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, மிளகாய் வற்றலைக் கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை வடித்து, சாதத்தோடு கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும். முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் உள்மூலம், பௌத்திரக்கட்டி, ரத்த மூலம் போன்றவை சரியாகும்.
முளைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் பசியின்மை நீங்கி, நல்ல பசி உண்டாக்கும். புளிச்சக்கீரை, மிளகு, மஞ்சள், உப்பு மற்றும் அதனுடன் முளைக்கீரையை சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ருசியின்மை குறைபாடு நீங்கும்.
முளைக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும். 40 நாட்களுக்கு குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்ல உயரமாக வளருவார்கள்.
முளைக்கீரைச் சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்தித்தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய்கள், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை சரியாகும். சிறுவர், சிறுமியருக்கு முளைக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது. முளைக்கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் குடல்புண்கள் குணமாகும்.
முளைக்கீரைச் சாற்றில் முந்திரிப்பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப்பொலிவு உண்டாகும். சொறி சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்தக் கீரையானது வெப்பத்தினால் ஏற்படும் ஜுரத்தை தணிக்க வல்லது. முளைக்கீரைச் சாற்றில் உளுந்தை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்.
-ஸ்டார் வெங்கட்.
Comments