அழியும் நிலையில் பொன்னேரிக் குட்டை ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை...!!! -
விவசாயிகள் அச்சம்!அழியும் நிலையில் பொன்னேரிக் குட்டை.. ஆக்கிரமிப்பு அகற்ற தேவை நடவடிக்கை...!!! - சின்னதடாகத்தில் பழமை வாய்ந்த பொன்னேரிக் குட்டை அழியும் அபாயத்தில் சிக்கியுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி, குட்டையை காப்பாற்ற, வருவாய்த்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சின்னதடாகம் ஊராட்சிக்குட்பட்ட பொன்னேரிக்குட்டை 14 ஏக்கர் பரப்பு கொண்டது. ஆக்கிரமிப்பு போக தற்போது வெறும், 7 ஏக்கர் மட்டும் உள்ளது.இன்னும் சில ஆண்டுகளில் அதுவும் மறைந்து போகும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மற்றும் சின்னதடாகம் இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.ஒரு காலத்தில், சின்னதடாகத்தின் அடையாளமாக இருந்தது பொன்னேரிக்குட்டை.தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் போது, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் மழைநீர், வெள்ளமாக பெருகி, பொன்னேரிக்குட்டையை வந்தடையும்.
ஆண்டு முழுவதும் இங்கு தேங்கி நிற்கும் நீரால் சின்னதடாகம், பெரியதடாகம், வீரபாண்டிபுதுார், நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம், மடத்துார் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும். குறிப்பாக, சின்னதடாகத்தில் நிலக்கடலை, பூசணிக்காய் உற்பத்தி அமோகமாக இருக்கும். இன்று நிலைமை அடியோடு மாறி விட்டது.
நிலத்தடி நீர்மட்டம், பல நுாறு அடிக்கு கீழே சென்று விட்டது.காரணம் சின்னதடாகம் வட்டாரத்தையொட்டியுள்ள பல குட்டைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பட்டா நிலங்களாக மாற்றப்பட்டதுதான். இதனால் இப்பகுதியில் விவசாயம் அழிந்து, எங்கும் செங்கல் சூளைகளாக மாறிவிட்டன. சின்னதடாகத்தில் வசிக்கும் இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், 'பொன்னேரிக்குட்டைக்கு நீர் வரும் பாதை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. இதை அகற்ற மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை மனு கொடுத்து விட்டோம்.அதிகாரிகள் குட்டையை வந்து பார்வையிட்டதோடு சரி. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குட்டையை ஆக்கிரமிக்கும் போக்கு நீடித்தால், அடுத்து தலைமுறைக்கு இவ்விடத்தில் குட்டை இருந்ததற்கான அடையாளம் கூட தெரியாமல் போய்விடும்' என்றனர்.கிடப்பில் துார்வாரும் பணிஇக்குட்டையை துார்வாரும் பணி அவ்வப்போது நடக்கும். பின் ஏதோ பிரச்னையால் கிடப்பில் போடப்படும். நீர் வரும் பாதை ஆக்கிரமிப்பில் இருப்பதால், தண்ணீர் வரத்து தடைபட்டுள்ளது. இந்த குட்டை நிறைந்து உபரி நீர் வெளியே செல்ல வசதியாக, அதன் ஒரு பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
சில ஆண்டுக்கு முன் குட்டை நிறைந்தபோது, உள்ளூரை சேர்ந்த சிலர், தடுப்பணையை உடைத்து விட்டனர்.இதனால், குட்டையில் மழைக்காலத்தில் நீர் தேங்கி நிற்க, வழி இல்லாமல் போனது. பல ஆண்டுகளாக அந்த தடுப்பணை இன்னும் செப்பனிடாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. குட்டை முழுவதும் மரம், செடி, கொடிகள் முளைத்து கிடக்கின்றன. சமீபத்தில் பெய்த மழையால், குட்டையின் ஒரு பகுதியில் சிறிதளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
- கிரி, தலைமை நிருபர்.
Comments