ரஜினிகாந்தின் மருத்துவ அறிக்கை என்ன..? கட்சி அறிவிப்பு எப்போது....?
ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.
22ஆம் தேதி ரஜினிகாந்துக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியது. இருப்பினும் ரத்த அழுத்தம் அதிகரித்த நிலையில் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில்,நேற்று இருந்ததைவிட ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் குறைவாக இருந்தாலும், அது வழக்கத்திற்கு அதிகமான அளவில் இருப்பதால் நேற்றைய இரவு அவ்வளவு ஒன்றும் சிறப்பாக இல்லை. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் எதுவும் அபாயகரமான எதையும் வெளிக்காட்டவில்லை.
ரஜினிகாந்த் தொடர்ந்து நெருக்கமாக கண்காணிக்கப்படுவார், அவரைப் பார்க்க வருகை தருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மேலதிக மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ரத்த அழுத்தம் எந்த அளவு கட்டுப்பாட்டுக்கு வருகிறது என்பதைப் பொருத்து ரஜினிகாந்தை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மாலை முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதி கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திட்டமிட்டபடி கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-ஸ்டார் வெங்கட்.
Comments