சங்கடம் தீர்க்கும் சனிப்பெயர்ச்சி! திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் கோலாகலம் !!

 

-MMH

உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நேற்று  அதிகாலை சனிப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அருள்மிகு திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சந்நிதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்நிலையில், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு 27-ம் தேதி, அதாவது நேற்று  அதிகாலை 5.22 மணிக்கு பெயர்ச்சியானார். இதனையொட்டி, ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக சனிப்பெயர்ச்சி விழாவின்போது பக்தர்களை அனுமதிக்கும் முடிவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கொரோனா விதிமுறைகளைப்  பின்பற்றி விழாவை நடத்த உத்தரவிட்டது.

இந்நிலையில், சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பக்தர்கள் ஒவ்வொருவரும் கொரோனா நெகடிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய முடியும் என்றும், நளன் குளத்தில் நீிராட அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, ஏற்கெனவே பதிவு செய்தோர் மட்டுமே நேற்று அனுமதிக்கப் பட்டனர். முன்பதிவு செய்யாத புதியவர்கள் யாரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே, சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, உச்சவர் ஸ்ரீசனீஸ்வரபகவான் தங்க காக வாகனத்தில் பிராகாரம் எழுந்தருளினார். பின்னர், வசந்த மண்டப்பத்தில் வைத்து சிறப்பு தீபாரதனை செய்யப்பட்டது.

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, 17 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்ததாக தகவல். அதுசரி மக்களே, சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிக்கு நல்லது நடக்கும் அந்த ராசிக்கு கெட்டது நடக்கும் என்று ஒரே குழப்பமா?  மனதில் உள்ள குழப்பத்தைக் தூக்கி அப்படி ஓரமாகப் போடுங்கள். உங்களுக்குத் தெரியுமா? சனியைப்போல் கொடுப்பவரும் இல்லை; சனியைப்போல் கெடுப்பவரும் இல்லை! உள்ளும் புறமும் தூய்மையாகக் கொண்டு தங்கள்  கடமையைக் கருத்துடன் செய்து வாருங்கள் போதும். சிறப்பானதைத் தரவும் சிரமங்களைத் தாங்கவும் சனிபகவான் ஆவன செய்வார். என்ன நாங்க சொல்றது ......சரிதானுங்களா!

என்றும் கடமையே கண்ணாய்,

-Ln.இந்திராதேவி முருகேசன், சோலை.

Comments