ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கனவுத் திட்டமான ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்துச் சிதறியது!!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் புரோட்டோ டைப் பூமிக்கு திரும்பி வந்தபோது வெடித்துச் சிதறியது.
அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. நிலவுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்ப வேண்டும் என்பதே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கனவு. இந்த திட்டத்திற்காகவே வடிவமைக்கப்பட்டது தான் ஸ்டார்ஷிப் ராக்கெட்கள். மனிதர்கள் மட்டுமின்றி 100 டன் சரக்குகளையும் இதில் கொண்டு செல்ல முடியும்.
சீரியல் எண் 8 அல்லது SN 8 என அழைக்கப்படும் இந்த ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் 16 அடுக்குமாடி அளவுக்கு உயரம் கொண்டது. மூன்று கார் அளவிலான ராப்டார் ராக்கெட் என்ஜின்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் வளிமண்டலத்தின் வழியாக பறக்க canards மற்றும் wing flaps ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. சுமார் 41 ஆயிரம் அடி உயரம் 13 கிலோ மீட்டர் தூரத்துக்குச் செல்லும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சோதனை முயற்சியாக டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போகா சிகா கடற்கரை பகுதியிலிருந்து சீறிப்பாய்ந்த ஸ்டார்ஷிப் ராக்கெட், தரையிறங்கியபோது வெடித்துச் சிதறியது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கனவுத் திட்டமான இந்த சோதனை முயற்சி இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் 8 கிலோமீட்டர் உயரம் வரை மட்டுமே பறந்த ஸ்டார்ஷிப், தரையிறங்கும்போது அதிலுள்ள 3 எஞ்சின்களும் ஒன்றன்பின் ஒன்றாக செயலிழந்து தோல்வியை சந்தித்தது. விண்ணுக்கு சென்று திரும்பி வரும் போது எரிகலன் தொழில் நுட்பகோளாறால் பூமியில் விழுந்து வெடித்துச் சிதறியது. லிஃப்ட் ஆஃப் செய்யப்பட்ட சுமார் 6 நிமிடங்கள் மற்றும் 42 வினாடிகளுக்குப் பிறகு, தரையிறங்க முயற்சித்தபோது போதுமான உந்துதல் இல்லாத காரணத்தால் வெடித்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சோதனை வெற்றியடையும் பட்சத்தில், ஸ்டார் ஷிப் மூலமாக செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதாக இருந்தது. ஆனால் சோதனை முயற்சி தோல்வியை சந்தித்ததால் இத்திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராக்கெட்டின் ஏறும் கட்டம் வெற்றிகரமாக இருந்ததாகவும், தங்களுக்கு தேவையான தரவுகள் கிடைத்து விட்டதால் இத்திட்டம் தங்களுக்கு வெற்றியான திட்டமே எனவும் ஸ்பேஸ் எக்ஸ் அதிபர் எலான் மஸ்க் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
-சுரேந்தர்.
Comments