சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அறுவடை செய்யப்பட்ட முள்ளங்கி பூமிக்கு கொண்டு வரப்பட்டுஆய்வு செய்ய முடிவு!! - நாசா

    -MMH

     வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அறுவடை செய்யப்பட்ட முள்ளங்கி பூமிக்கு கொண்டு வரப்பட்டு, இங்கு விளையும் முள்ளங்கிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ய நாசா முடிவு செய்துள்ளது. கடந்த 2015ல் ஹாலிவுட்டில் வெளியான 'தி மார்சியன்' திரைப்படத்தில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் விஞ்ஞானி, தவறுதலாக தனித்து விடப்படுவார். அங்கு அவர் உயிர் வாழ செவ்வாயில் கிழங்குகளை விளைவித்து உண்பார். கற்பனையாக காட்டப்பட்ட இந்த காட்சிகள், இப்போது நிஜமாகி இருக்கிறது. ஆம், நாசா விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் முள்ளங்கியை பயிரிட்டு சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன் பல்வேறு செடிகளை அங்கு பயிரிட்டு ஆய்வு நடத்தி வரும் நாசா விஞ்ஞானிகள் இம்முறை முள்ளங்கியை விளைவித்து சாதித்துள்ளனர்.

இதில் இருந்து 20 வளமான மற்றும் நன்றாக பருத்துள்ள முள்ளங்கியை அறுவடையும் செய்துள்ளனர். இந்த முள்ளங்கிகள் பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இவை பூமிக்கு கொண்டு வரப்பட உள்ளது. புவி ஈர்ப்பு விசையே இல்லாத இடத்தில் தாவரங்கள் எப்படி வளர்கின்றன என்ற ஆய்வில் இது ஒரு வரலாற்று சாதனை என நாசா புகழ்ந்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி ஆய்வு மைய ஆய்வகத்தில் முள்ளங்கி பயிரிடப்பட்டு உள்ளது. இது, வரும் 15ம் தேதி அறுவடை செய்யப்படுகிறது. இந்த முள்ளங்கியுடன், விண்வெளி முள்ளங்கியை ஒப்பிட்டு இரண்டிலும் உள்ள சத்துக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

"புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் எந்தெந்த தாவரங்கள், காய்கறிகள் எப்படி வளர்கின்றன என்பதன் சூட்சமத்தை அறிந்து கொள்வதன் மூலம், விண்வெளியில் விளைவிக்கப்படும் காய்கறிகளை நீண்ட கால ஆய்வில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவாக்கலாம்.

மேலும், செவ்வாய்க்கு விஞ்ஞானிகளை பத்திரமாக அனுப்பி திருப்பி அழைத்து வரவும் இந்த காய்கறி விளைச்சல் ஆய்வு உதவும்." என கென்னடி ஆய்வு மைய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

-சுரேந்தர்.

Comments