மதுரை இளைஞரின் லாக்கப் மரணம்! - வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

 

-MMH

மதுரை பேரையூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரது மகன் ரமேஷ். கடந்த செப்டம்பர் மாதம் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர், அப்பகுதியிலிருந்த மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

ரமேஷின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, சார்பு காவல் ஆய்வாளர்கள் ஜெய கண்ணன், பரமசிவம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சூழலில் பேரையூரை சேர்ந்த சந்தோஷ், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  “எனது சகோதரர் இதயக்கனி, புனிதா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். புனிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சாப்டூர், சார்பு ஆய்வாளர்கள் ஜெயகண்ணன் மற்றும் காவலர் ராஜா ஆகியோர் எனது குடும்பத்தினரை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்தனர்.

என் இளைய சகோதரர் ரமேஷை கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இரவில் ரமேஷ் வீடு திரும்பவில்லை. என் வீட்டிலிருந்து 300 அடி தொலைவில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

போலீசார் தாக்கியதால்தான் என் சகோதரர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோதமாக இரவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. எனவே ரமேஷ் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்து, வழக்கு விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார்.

இவ்வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி ரமேஷின் உடல் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் இவ்வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, ரமேஷ் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

ஏற்கனவே சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கை முதலில் கையிலெடுத்த சிபிசிஐடி அடுத்தடுத்து 10 போலீசாரை கைது செய்தது. இந்தச் சூழலில் மதுரை ரமேஷ் வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-பாரூக் சிவகங்கை. 

Comments