பாகிஸ்தானில் தமிழ் பாரம்பரிய முறைப்படி நடந்த திருமணம் !!


   -MMH

அமெரிக்காவில் தொடங்கி ஆஸ்திரேலியா வரை உலகம் முழுவதும் தமிழர்கள் பரவி இருக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். உலக அளவில் ஆளுமை நிறைந்த சக்திகளாக தமிழர்கள் இருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.. அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தொடங்கி கூகுளின் சுந்தர் பிச்சை வரை தமிழர்கள் ஆளுமை நிறைந்தவர்களாக  இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானில்  தமிழர்கள்  வாழ்கிறார்கள் என்றால் நம்மால் நம்ப முடியாது தான். அனைவரது புருவங்களும் வியப்பால் விரிவது இயல்புதான். இந்த செய்தியை கேள்விப்பட்ட எனக்கும் அதே உணர்வு தான் நீடித்தது. அதனால் அது சம்பந்தமான தகவல்களை அலசி ஆராய இணையத்தில் தேடலை தொடங்கினேன். நான் தெரிந்துகொண்டதை   பற்றி விவரிக்கிறது இந்த கட்டுரை. 

பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான  கராச்சியின் அருகில் உள்ளது  மதராசி பாரா  பகுதி. அங்கு  சுமார் 100 தமிழ் குடும்பங்கள்  உள்ளன. அவர்கள் மூன்று தலைமுறைக்கு முன்பு கராச்சியில் குடியேறியவர்கள். அவர்கள் தங்களது குல தெய்வமான மாரியம்மனை இன்றும் வழிபட்டு கொண்டிருக்கின்றனர்.  அவர்களது திருமணம்  தமிழ் கலாச்சாரப்படி மாரியம்மன் கோவிலில்   நடத்தப்படுவது ஆச்சரியமான செயலாக பார்க்கப்படுகிறது.  அதே போன்று குறைந்த  அளவிலான தமிழ் கிருத்துவர்களும்  கராச்சியில் இருக்கின்றனர் என்பது ஆச்சரியமான விஷயம். தமிழ்நாட்டில் இருந்து கராச்சி நகருக்கு ஆகஸ்ட் 2019 வரை மாதந்தோறும் சுமார் 30 தபால்கள்  சென்றது என்பது குறிப்பிடத்தக்கது . கராச்சியில் உள்ள தமிழர்கள் தாங்கள் தொப்புள் கொடி உறவான தமிழ்நாட்டோடு இன்னும் தொடர்பில் உள்ளனர் என்பது வியப்புக்குரிய கூடுதலான விஷயமாகும் . பாகிஸ்தானுக்கு எப்போது, எதற்காக தமிழர்கள் சென்றார்கள்? அங்கு எத்தனை தமிழர்கள் வாழ்கிறார்கள்? அவர்கள் அனைவருக்கும் தமிழில் பேச, எழுத, படிக்க தெரியுமா? பாகிஸ்தான் தமிழர்கள் எந்த கலாசாரத்தை பின்பற்றுகிறார்கள்?  அவர்கள் உலகத் தமிழர்களுக்கும், அரசுகளுக்கும் முன்வைக்கும் கோரிக்கை என்ன?

1947ஆம் ஆண்டு, அப்போதைய மதராஸ் மற்றும் மைசூர் மாகாணங்களுக்கு உட்பட்ட பகுதியில் இருந்து மட்டும் சுமார் 18,000 பேர் பாகிஸ்தானுக்கு சென்றதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இருந்தும் குறிப்பிட்ட அளவில் தமிழர்கள் பாகிஸ்தானின் கராச்சிக்கு  புலம் பெயர்ந்துள்ளனர். தமிழர்கள் கராச்சி நகரத்தை சென்றடைந்த காலம்தொட்டு இன்றுவரை தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலானோர் அங்குள்ள ஜின்னா அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் சுகாதார பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அந்த மருத்துவமனை வளாகத்துக்கு அருகில்தான் தமிழர்களின் குடியிருப்பு அமைந்துள்ளது. கராச்சி நகரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மதராஸி பரா பகுதியில்தான், அந்த நகரின் பெரிய இந்து மத வழிபாட்டுத்தலமான மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

கராச்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும், அன்று முதல் இன்றுவரை இங்குள்ள பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்படவில்லை."

"எனவே, தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த புதிதில் தமிழை நன்கறிந்திருந்த பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு பேச, எழுத, படிக்க சொல்லி கொடுத்து வந்தனர். காலப்போக்கில் அடுத்தடுத்த தலைமுறைகளை சேர்ந்த பெற்றோருக்கே தமிழ் மொழி சரளமாக பேச முடியாத நிலை உருவானதால் அவர்களது குழந்தைகளுக்கு தாய்மொழியை அறிந்துகொள்ளும் வாய்ப்பே குன்றிவிட்டது. இருப்பினும், இந்த சூழ்நிலையை கண்டு வேதனையடைந்த தன்னார்வலர்கள் சிலர் பல ஆண்டுகளாக இங்குள்ள மாரியம்மன் கோயிலில் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இருப்பினும் பல தலைமுறைகளாக பாகிஸ்தான்வாழ் தமிழர்களுக்குள்ளேயே திருமண உறவு நீடித்ததால் இங்குள்ள ஏராளமானோருக்கு தமிழகத்தில் நேரடி உறவுமுறைகளே இல்லை என்றே சொல்லலாம். மேலும், சமீப ஆண்டுகளாக கராச்சியில் வாழும் தமிழர்கள் வேற்று மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்களை திருமணம் செய்துகொள்வது அதிகரித்து வருவதால், அவர்களது அடுத்த சந்ததியினருக்கும் தமிழ் மொழி கடத்தப்படுமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது"

இங்குள்ள மாரியம்மன் கோவிலில் தான் தமிழர்களின் திருமணம் நடத்தப்படுகிறது. அதுபோன்ற ஒரு  திருமண நிகழ்ச்சியின் காணொளியை  காண நேர்ந்தது . அங்கு திருமணம் அங்குள்ள மாரியம்மன் கோவிலின் பூசாரி அவர்களின் தலைமையில் இந்த முறைப்படி நடைபெறுகிறது. 

பாகிஸ்தானில் வாழும் தமிழர்கள் தங்களது கலாச்சாரமும் தமிழ் மொழியும்  எப்பொழுதும் காக்கப்பட வேண்டும் என்றே விரும்புகின்றனர். அங்கு வசிக்கும் தமிழர்கள் சிலர் தமிழகத்திற்கு வந்து தங்களது உறவினர்களை காண விரும்புகின்றனர் ஆனால் விசா போன்ற நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் அவர்களால் அவ்வளவு எளிதில் வருவதற்கு இயலவில்லை. பாகிஸ்தானில் வாழும் தமிழர்கள் தமிழகத்திற்கு நிரந்தரமாக திரும்புவதற்கு விரும்புவதில்லை.மாறாக  அவர்கள் பாகிஸ்தானிய  கலாச்சாரத்தில் இணைந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். இந்த நவீன யுகத்திலும் நாடு விட்டு நாடு புலம் பெயர்ந்தும்  தங்களது மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க அவர்கள் போராடிக் கொண்டிருப்பது நமக்கே வியப்பான விஷயம்.

பாகிஸ்தானில் பலரும்  அறியாத ஒரு இனமாக வாழ்ந்தாலும்  தங்களது மொழி மற்றும் கலாச்சார  அடையாளத்தை பாதுகாக்கும் தமிழர்களை பாராட்டுவோம்! வாழ்த்துவோம்! வணங்குவோம்!

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ராஜசேகரன்,தஞ்சாவூர்.

Comments