ஏர்பேக் இல்லாத டாடா ஏஸ், ஆட்டோக்களுக்கும் பம்பரை அகற்றும் நடவடிக்கை சரிதானா.? சிறிய வகை வாகன ஓட்டிகள் அதிருப்தி!

-MMH

பெரும்பாலான சாலை விபத்துகளில் உயிரிழப்புகளுக்கும், அதிகமான வாகன சேதத்திற்கும் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் பம்பர்களே முக்கிய காரணம் என்றும், அதனால், அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் இல்லாவிட்டால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், வாகன ஆய்வாளர்கள் பம்பர்கள் பொருத்திய வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். இது 'ஏர்பேக்' உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் குறைவாக உள்ள டாடா ஏஸ், ஈச்சர் போன்ற சிறிய வகை பொதுப் போக்குவரத்து வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பம்பர்கள் பொறுத்துவதால் 'ஏர்பேக்' வேலை செய்வது இல்லை என்பது முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. ஆனால், 'ஏர்பேக்' இல்லாத டாடா ஏச, ஈச்சர், ஷேர் ஆட்டோ உள்ளிட்ட சிறிய பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பம்பர் பொருத்துவதாலேயே அவர்களது வாகனங்களும், அதில் பயணம் செய்பவர்களும் ஒரளவு காப்பாற்றப்படுவதாகவும், அதனால், 'ஏர்பேக்' இல்லாத பாதுகாப்பு வசதிகள் குறைவாக உள்ள பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு பம்பர் பொருத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும் என்று அதன் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கோரிக்கையையும், ஆதங்கத்தையும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து சில ஓட்டுனர்கள் கூறுகையில், "முன்னால் பம்பர் மாட்டினால் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள 'ஏர்பேக்' வேலை செய்யாது என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். எங்களை மாதிரி டாடா ஏஸ், ஈச்சர், ஆட்டோ வாகனங்கள் ஓட்டுகிற ஏழை பொது வாகன ஓட்டிகளையும், எங்கள் வாகனங்களையும் அந்த பம்பர்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது. டாடா ஏசியில் 'ஏர்பேக்' எங்கே இருக்கிறது? எந்த பாதுகாப்பு வசதியுமே இல்லை.

முன்புறம் முழுவதும் பிளாஸ்டிக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சுவரிலோ அல்லது மற்ற வாகனங்களிலோ மோதினால் வாகனங்கள் நேரடியாக அடி வாங்கும். உள்ளே வாகனங்கள் அமுக்கி ஓட்டுநர் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இன்ஜினும் சேதமடையும். இந்த பம்பர் மற்ற வாகனங்கள் மீது மோதுவதால் பம்பர் அடித்து யாரும் இறக்க மாட்டார்கள். வானகங்களுக்கு பெரிய சேதம் ஆகாது.

டாடா ஏஸ், ஈச்சர் போன்ற எளிய வகை வாகனங்களின் முன்புறம் பிளாஸ்டிக்கை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால், வாகனம் சேதமடைந்தால் இன்சூரன்ஸ்-க்கும் விண்ணப்பிக்க முடியாது. 'ஏர்பேக்' தற்போது வரும் புது ரக கார்களில் மட்டுமே உள்ளது. பெரும்பாலான பழைய மாடல் கார்களில் 'ஏர்பேக்' கிடையாது. அதனால், 'ஏர்பேக்' இல்லாத வாகனங்களுக்கும், எங்களை போன்ற எளிய வகை பொது வாகனங்களுக்கும் தற்போது கொண்டு வந்துள்ள பம்பர் பொருத்தினால் நடவடிக்கையை என்ற நடைமுறையை கைவிட வேண்டும்.

வாகனங்களின் பெரும்பாலான விபத்துகளுக்கும், சேதத்திற்கும் முக்கிய காரணம் எது என்பதை கண்டறிந்து அதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. அவர்கள் அபராதம் விதிப்பது எல்லாமே ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமே உள்ளது. பெரும்பாலான சாலை விபத்துகள் வேகமாக செல்லும் கார்களாலேயே ஏற்படுகிறது.

சாதாரண இரு வழிச்சாலைகள் முதல் ஆறு வழிச்சாலைகளில் கார்கள் மிக சாதாரணமாக 120 கி.மீ., முதல் 140 கி.மீ., வேகத்தில் பறக்கிறார்கள். கார்களின் வேகத்தை 80 கி.மீ-க்கு மேல் போகக்கூடாது என்ற நடைமுறையை போக்குவரத்து துறை அதிகாரிகளால் செயல்படுத்த முடியவில்லை. அதை ஒழுங்காக செயல்படுத்தினாலே போதும், பாதி விபத்துகளும், உயிரிழப்புகளும் குறையும்.

ஏர்பேக்' உள்ளிட்ட எத்தகைய பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும் அதி வேகத்தில் போய் மோதுவதால் வாகனங்களுக்கும், அதில் பயணம் செய்பவர்களுக்கும் சேதம் ஏற்படத்தான் செய்கிறது. அதனால், விபத்துகளை கட்டுப்படுத்த கார்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்கள்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments