கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு நார்வேயில் 29 பேர் உயிரிழப்பு!
‘பைசர் – பயோஎன்டெக்’ நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை அவசர காலத்துக்கு பயன்படுத்திக் கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து நார்வே நாட்டில் சுமார் 42,000 பேருக்கு இந்த தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது. இதில் முதியவர்கள் உட்பட கொரோனா தொற்றுக்கான ஆபத்து இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு புதிதாக 6 பேர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டில் மொத்தஉயிரிழப்பு 29 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நார்வே அரசின் மருந்துகள் ஏஜென்சி கடந்த சனிக்கிழமை கூறும்போது, “எங்கள் நாட்டில் தற்போது வரை பைசர் பயோஎன்டெக் தடுப்பூசி மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. எனவே அனைத்து மரணங்களும் அந்த தடுப்பூசியுடன் தொடர்புப் படுத்தப் படுகிறது. நார்வேயில் இதுவரை 29 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அனைவரும் கடும் உடல் நலக்கோளாறு கொண்ட முதியவர்கள். எனவே இவர்களுக்கு இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து கவலை அடைந்துள்ளோம். இறந்தவர்களில் பெரும்பாலானோருக்கு குமட்டல், வாந்தி, காய்ச்சல் போன்ற எதிர்பார்க்கப்பட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டது” என்று தெரிவித்தது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் அவசரம் காட்டி வரும் நிலையில் ஒவ்வாமையால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் அரிதாகவே வெளியாகின்றன.
அமெரிக்காவில் டிசம்பர் 14 முதல் 23 வரை 19 லட்சம் பேருக்கு முதல் டோஸ் ‘பைசர்’ தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு 21 பேருக்கு ஒவ்வாமையால் கடும் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பாரூக்.
Comments