திராவிட இயக்கங்களுக்கு மாற்று ஆன்மீக அரசியல் தான் - அர்ஜுன் சம்பத் பேட்டி !!
கோவை : திராவிட இயக்கங்களுக்கு மாற்று ஆன்மீக அரசியல் தான் என்பதை நடிகர் ரஜினிகாந்த் தெளிவுபடுத்தி சென்றிருக்கிறார் என்று இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் அணியின் மாநில தலைவர் மந்த்ராச்சலத்தின் பிறந்த நாள் விழா கோவையில் தனியார் அரங்கில் நடைபெற்றது. அத்துடன் ஜோதிடர் அணியின் பயிற்சி வகுப்பும் இங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்கப் போவதில்லை என்று அறிவித்தாலும் அவர் ஆன்மீக அரசியல் கொள்கையை திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக விட்டுச் சென்றிருக்கிறார் என்று கூறினார். அந்த ஆன்மீக அரசியலை முன்னிறுத்தி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று அவர் கூறினார்.
மேலும் பொங்கல் பண்டிகையை தேவாலயங்களில் கொண்டாடி அதை கிறிஸ்தவ மயமாக்க முயற்சியை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பொங்கல் பரிசு தொகுப்பு பொங்கல் யார் கொண்டாடுகிறார்களோ அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் மதம் சார்ந்த பண்டிகைக்கு இதுபோல் பரிசு தொகை வழங்கலாம் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே ரஜினியின் நண்பராக இருக்க கூடிய மு.க அழகிரி தங்களது ஆன்மீக அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடைபெற்ற இந்து மக்கள் கட்சியின் நிகழ்ச்சியில் முத்து அரங்க சாமி, மாநிலச் செயலாளர் காலனி சுப்பிரமணியம், இளைஞரணி செயலாளர் சண்முகவடிவேல், மாவட்ட தலைவர் பிவி மாணிக்கம், மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் சந்தோஷ் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருமுருகனார் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-சீனி,போத்தனூர்.
Comments