காரைக்குடியை மாநகராட்சியாகவும், தனிமாவட்டமாகவும் அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!!

 -MMH

காரைக்குடியை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் ஒன்றை அமைக்கவும், காரைக்குடியை மாநகராட்சியாக அறிவிக்கவும் கோரி, தமிழக மக்கள் மன்றம் இன்று ஏற்பாடு செய்த நிகழ்வில் 600க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி காரைக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று நடத்திய தமிழக மக்கள் மன்றத்தின் மாநிலத் தலைவர் ச.மீ.இராசகுமார் பேசியபோது, "பாரம்பரிய நகரமான காரைக்குடி மிகப்பெரிய சுற்றுலாத்தலமாகவும் இருப்பதால், ஆண்டுதோறும் வெளிநாடுகளில்  இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்துசெல்கின்றனர்.

ஆனால் இப்போது இங்கு பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால், காரைக்குடியின் அனைத்து சாலைகளும் சேறும் சகதியுமாக பயணிக்க முடியாதபடி இருக்கிறது. மேலும் குண்டும் குழியுமான சாலைகளால் தினம்தோறும் விபத்துகளும் உயிர்ப்பலியும் ஏற்பட்டு வருகிறது.

1928இல் வெள்ளையர்கள் ஆட்சியிலேயே நகராட்சியாக உருவாக்கப்பட்ட காரைக்குடியை, மாநகராட்சியாக அறிவிக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் நெடுங்காலமாகக் கோரிக்கை வைத்தனர். மேலும் 1986 முதல் காரைக்குடியைத் தலைநகரமாகக் கொண்ட தனிமாவட்டம் அறிவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை இருந்துவருகிறது. 

சமீபகாலமாக தமிழக அரசு பல புதிய மாவட்டங்களை உருவாக்கி அறிவித்த போதிலும், காரைக்குடி மக்களின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இங்கு தற்போது சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியினராக இருப்பதால் காரைக்குடியை தமிழக அரசு புறக்கணிக்கிறது. மேலும் காரைக்குடியின் வளர்ச்சிக்கு எந்த நிதியும் ஒதுக்காமல், பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்கும் நிதியினை உடனடியாக வழங்காமல் மூன்றாண்டுகளாக காரைக்குடியின் நிலை சீர்குலைந்து காணபடுகிறது. எனவே, காரைக்குடியில் அனைத்து சாலைகளையும் அமைப்பதோடு, மழைநீர் கால்வாய்கள், சாக்கடைக் கால்வாய்கள், எல்.இ.டி தெருவிளக்குகள், சந்தைகள் மேம்பாடு, நகருக்குள் கழிவறை என காரைக்குடி நகர மேம்பாட்டுக்காக உடனடியாக காரைக்குடியினைச் சீர்படுத்த ரூ.500கோடி சிறப்பு நிதியினை வழங்கி காரைக்குடியைச் சீரமைக்க வேண்டும் எனவும், உடனடியாக காரைக்குடியினை மாநகராட்சியாகவும், தனி மாவட்டமாகவும் அறிவிக்க வேண்டுமெனவும்" வலியுறுத்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு நகரச் செயலாளர் சீனிவாசன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் சங்கு உதயகுமார், நாம் தமிழர் மாவட்டச் செயலாளர் சாயல்ராம், அமமுக மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சகுபர் சாதிக், மனிதநேய மக்கள் கட்சியின் நகரத் தலைவர் சித்திக், மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் கமல்ராஜா, ஆம் ஆத்மி மாவட்டப் பொறுப்பாளர் சோமன், தமிழ்ப்பேரரசு கட்சியின் மாவட்டச் செயலாளர் அண்ணாத்துரை, மக்கள் பாதை கெரோலின், வனவேங்கைகள் கட்சி நகரச் செயலாளர் முருகேசன், திராவிட விடுதலைக் கழகம் பெரியார் முத்து, பச்சைத்தமிழகம் கட்சி தமிழ் கார்த்திக், உலகத்தமிழர் பாசறை எழிலரசன், தமிழர் விடியல் கட்சி கண்ணன், தோள் கொடு தோழா இயக்கம் நசீர், வள்ளல் அழகப்பர் இளையோர் மன்றம் கனி முகம்மது ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். தமிழக மக்கள் மன்றச் செயலாளர் கரு.ஆறுமுகம் நன்றி தெரிவித்தார்.

- தவச்செல்வன், காரைக்குடி.

Comments