ஆன்லைன் கடன் மோசடி பின்னால் மூளையாக சீனாக்காரர்கள்..! போலீஸ் கண்டுபிடிப்பு.!!

-MMH

ஆன்லைன் கடன் மோசடி பின்னால் மூளையாக சீனாக்காரர்கள். சென்னை போலீஸ் கண்டுபிடிப்பு. இணையம் வாயிலாக கடன் கொடுத்து, கடன் வாங்கியவர்களின் உறவினர்களுக்கு செல்போனில் மிரட்டல் விடுத்து கந்து வட்டி வசூலித்து வந்த சீன நாட்டை சேர்ந்த இருவர் உட்பட நான்கு பேரை பெங்களூர் கால்செண்டரில் வைத்து, சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனாவை விட்டு உலகையே முடக்கிப்போட்ட சீனர்களின் மோசடி நிறுவனத்திற்குள் புகுந்து மொத்தமாக முடக்கிய சென்னை போலீசின் அதிரடி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை வேங்கைவாசல் பகுதியை சேர்ந்தவர் கணேசன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார சிக்கலில் மாட்டித் தவித்த கணேசன், இணையவழியாக உடனடி கடன் வழங்கும் எம்.ரூபே ஆப் மூலமாக 5000 ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

அதற்கு வட்டியாக 1500 ரூபாய் பிடிக்கப்பட்டு 3500 ரூபாய் கணேசனுக்கு வழங்கப்பட்டது. மேலும் ஒரு வாரத்தில் அந்த கடனை அடைக்க அடுத்தடுத்து இதே போன்ற பல்வேறு செயலிகளை தரவிறக்கம் செய்து 45 செயலிகளிலிருந்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

வாரங்கள் கடக்க, கடக்க, வட்டி தொகை எகிறிக்கொண்டே சென்றுள்ளது. வட்டி தொகையை செலுத்த முடியாமலும், அசலை அடைக்க முடியாமல் பரிதவித்து வந்த அவருக்கு இணைய வழி கடன் செயலிகளில் இருந்து தொடர்ந்து கடனைக் கேட்டு தொந்தரவு தரும்படியான அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் அவரது செல்போன் தொடர்பில் இருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் அழைப்புகள் வந்து ஒரு கட்டத்தில் அவை ஆபாச பேச்சுகளாகவும் மிரட்டல்களாகவும் மாறத்தொடங்கின. இதனால் மன உளைச்சளின் உச்சத்துக்கு ஆளான கணேசன், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

இந்தப் புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சீட்டு மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். கணேசன் மற்றும் அவரது உறவினர்களுக்கு மிரட்டல் விடுத்த அலைபேசி எண்களை ஆய்வு செய்த போது, அந்த அழைப்புகள் பெங்களூருவில் இருந்து வந்தது உறுதி படுத்தப்பட்டது. இந்த உடனடி கடன் வழங்கும் செயலிகள் பெங்களூருவில் ஏராளமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவினர் பெங்களூரு சென்று புலன் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த குறிப்பிட்ட அலைபேசி எண்கள் பெங்களூருவில் உள்ள ட்ரூ கிண்டில் டெக்னாலஜி எனும் தனியார் கால் சென்டர் நிறுவனத்தில் இருந்து வந்ததும் மத்திய குற்றப்பிரிவினருக்கு தெரியவந்தது. இந்த கால் சென்டர் நிறுவனத்தை 110 ஊழியர்களுடன் பெங்களூருவைச் சேர்ந்த பிரமோதா மற்றும் பவன் ஆகியோர் நடத்தி வந்ததை கண்டறிந்தனர்.

இந்த கால் சென்டர், மை கேஷ், அரோரா லோன், குவிக் லோன், டி மணி உள்ளிட்ட பல்வேறு செல்போன் செயலிகள் மூலம் நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு குறுகிய காலத்தில் அதிக வட்டிக்கு கடன் அளித்து கடனை திரும்ப பெற மிரட்டி கந்து வட்டி வசூலித்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

மத்திய குற்றப் பிரிவினரின் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, பிரமோதா மற்றும் பவன் ஆகியோரின் பின்னணியில் சீன நாட்டை சேர்ந்தவர்கள் இருப்பது காவல்துறையினருக்கு மேலும் அதிர்ச்சி அளித்தது. பிரமோதா மற்றும் பவன் ஆகியோரிடம் இருந்து 21 லேப்டாப்கள், 20 செல்போன்கள் பறிமுதல் செய்ததோடு, பின்புலமாக செயல்பட்ட சீன நாட்டை சேர்ந்த வு யுவன்லும் மற்றும் ஸியோ யமோ ஆகியோரும் கைது செய்யப்பட்டு 2 லாப்டாப்கள் மற்றும் 6 செல்போன்கள், கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் கடந்த ஓராண்டாக காலாவதியான விசாவுடன் இந்தியாவில் தங்கி இருந்து வங்கி கணக்குகளில் பணபரிமாற்ற வேலைகளை கவனித்து வந்துள்ளனர். இது தொடர்பாக 2 வங்கி கணக்குகளில் சுமார் 2 கோடி ரூபாய் முடக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்கள் மற்றும் செல்போன்கள் தடயவியல் துறைக்கு அனுப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ள நிலையில், இந்த கந்து வட்டி கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட சீனாவை சேர்ந்த ஹாங் என்பவர் சமீபத்தில் இந்தியா வந்து சென்றதும் தெரியவந்தது

அவருடைய பயண விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்புகளில் இருந்து இந்தியா முழுவதும் இவர்கள் கடன் வழங்கிய 25 ஆயிரம் பேரின் விவரங்கள் தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு அவர் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி சிறப்பித்தார்.

சீனர்கள், பல்வேறு மோசடி செல்போன் செயலிகள் மூலம் இந்தியாவில் ஊடுருவி மக்களின் பணத்தை வட்டியாகவும், கட்டணமாகவும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பறித்து வரும் நிலையில், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே காவல்துறையின் எச்சரிக்கையாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ருக்மாங்கதன் சென்னை.


Comments