காகத்தை வெள்ளை என்று பிரதமர் மோடி சொன்னால் கூட, அதையும் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றுவார்கள்!!

-MMH

"காகத்தை வெள்ளை என்று பிரதமர் மோடி சொன்னால் கூட, அதையும் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றுவார்கள்" 

கார்த்தி சிதம்பரம் எம்பி கடும் தாக்கு!

சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எம்பி நேற்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: விவசாயிகள் போராட்டம் வேளாண் சட்டத்திற்கு எதிராக மட்டுமல்ல, அது மத்திய அரசின் ஆணவத்தை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டம்.

அரசுக்கு ஆணவம் இருக்கும்வரை விவசாயிகள் போராட்டம் தொடரும். மத்திய அரசு யாரையும் கலந்தாலோசிப்பது கிடையாது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ஆணவப்போக்கோடு செயல்படுகிறது. நாளை காலை பிரதமர் மோடி, காகத்தை வெள்ளை என்று சொன்னால் கூட அதையும் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றி விடுவார்கள்" என்று கூறினார்.

மேலும், "சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். எங்கள் கூட்டணிக்கு புதிய அரசியல் கட்சிகள் வர வாய்ப்புள்ளது. அதன்பிறகு தான் தொகுதி ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும்" என்றும் கூறினார்.

மேலும், "இந்த அரசின் திட்டங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுகிறோம். அதைப்பற்றி அமைச்சர் பாஸ்கரன் பேசாமல், 'நாங்கள் காரில் வருகிறோம், வேட்டி, சட்டை அணிகிறோம், கடிகாரம் கட்டுகிறோம்' எனப் பேசி வருவதும் அழகல்ல. அதுவும் அபத்தமானது.

இந்த அரசின் ஊழலை வேறு எங்கும் தேட வேண்டாம். காரைக்குடி பாதாளச் சாக்கடை திட்டத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் ஒரே நிறுவனம்தான் பாதாளச் சாக்கடை பணியை எடுத்துள்ளது. அந்நிறுவனம் பணியைத் தரமாக செய்யவில்லை" என்று குற்றம் சாட்டினார்.

மேலும், "அனைத்து மாணவர்களிடமும் ஸ்மார்ட் போன் வசதி இருக்க வாய்ப்பில்லை. இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காவது பள்ளிகள் திறப்பதை வரவேற்கிறேன். மற்ற நாடுகளை போன்று இந்தியாவில் கரோனா தடுப்பூசியில் வெளிப்படை தன்மை இல்லை" என்றும் கூறினார்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments