அவினாசிலிங்கம் பல்கலை., பட்டமளிப்பு விழா! - இணையம் வாயிலாக மத்திய அமைச்சர் பங்கேற்பு!!

    -MMH

     கோவை: அவினாசி லிங்கம் பல்கலைக்கழகத்தில் 32வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வீடியோ கன்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு அவினாசி லிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, பல்கலைக்கழத்தின் வேந்தர் எஸ்.பி.தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"பழமையான, புகழ்வாய்ந்த இந்த பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா நாளை (22ம் தேதி) நடைபெறுகிறது. இந்தாண்டு இளநிலையில் ஆயிரத்து 893 பேரும், முதுநிலையில் 534 பேரும், ஆய்வியல் நிறைஞர் (எம்.எஸ்.சி) 40 பேரும், முனைவர் பட்டத்தை 39 பேரும் என மொத்தம் 2 ஆயிரத்து 506 பேர் பெற உள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் உள்ளதால் இணையம் வழியாகவே மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளது.  166 பேர் மட்டும் நேரடியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டம் பெற உள்ளனர்.

இதில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கலந்து கொண்டு மாணவிகளுக்கு இணையம் மூலம் பட்டங்கள் வழங்கி மாணவிகள் மத்தியில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாற்ற உள்ளார். அவருக்கு எங்கள் பல்கலைக்கழகம் மூலமாக கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளோம்." இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பல்கலைக்கழகத்தி நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம், துணை வேந்தர் பிரேமாவதி விஜயன்,பதிவாளர் கவுசல்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments