லாரி மீது கார் மோதியதில் கோவை தம்பதி உட்பட மூவர் விபத்தில் பலி!!!

 

-MMH

     வெள்ளகோவில் அருகே, நின்ற லாரி மீது கார் மோதியதில், தம்பதி உட்பட மூன்று பேர் பலியாகினர்.கோவை, வெள்ளலுார், அண்ணா நகரை சேர்ந்தவர் மயில்சாமி, 39; கத்தாரில் பொறியாளராக பணிபுரிந்துவந்தார். விடுமுறையில், கோவை வந்தார். மனைவி இந்து, 37, மாமியார் கவுசல்யா, 60 உட்பட 6 பேர், காரில், திருநள்ளாறு புறப்பட்டனர். மயில்சாமி, காரை ஓட்டினார்.திருப்பூர் மாவட்டம், ஓலப்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை 4:30 மணியளவில் கார் வந்தபோது, பழுதாகி நின்ற லாரி மீது மோதியது. 

இதில் மயில்சாமி, இந்து, கவுசல்யா ஆகியோர், அதே இடத்தில் இறந்தனர். மகன் குரு கவுதமன்,13 மற்றும் உறவினர்கள் கலைவாணி,38, ரம்யா,11, படுகாயமடைந்தனர். இவர்கள், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.லாரி டிரைவர் திருச்சி மாத்துாரை சேர்ந்த பாபு, 50, என்பவரிடம், வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர். எஸ்.பி., திஷாமிட்டல் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்.

காரணம் என்ன? போலீசார் கூறுகையில், 'மேட்டுப்பாளையத்தில் இருந்து, திருச்சிக்கு சென்றுக்கொண்டிருந்த அட்டைப்பெட்டி லோடு ஏற்றிய லாரி, நள்ளிரவு 1:00 மணி முதல் பழுதாகி ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்தது. பழுதான லாரி, மூன்றரை மணி நேரமாகியும் அங்கிருந்து அகற்றப்படவில்லை. இந்த விபத்து நடப்பதற்கு சற்றுமுன்புதான், லாரி மீது, கோவை சிங்காநல்லுாரை சேர்ந்த நிக்சன் என்பவரின் கார் மோதியது. மோதிய வேகத்தில், கார், ரோட்டின் வலதுபுறம்ஒதுங்கி நின்றது. காரில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர். இது நடந்த சற்று நேரத்தில், லாரி மீது கார் மோதி, மூவர் உயிரை பலிவாங்கியுள்ளது' என்றனர்.

நாளையவரலாறு செய்திக்காக, 

-ஹ.மு.முஹம்மதுஹனீப் திருப்பூர்.

Comments