திமுக - அதிமுக இடையே மோதல்!! - மினி கிளினிக் திறப்பு விழா பாதியிலேயே நிறைவுற்றது!

    -MMH

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள முசுண்டபட்டி ஊராட்சியில் மினி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சியின்போது திமுக அதிமுக இடையே சலசலப்பு. 

சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முசுண்டபட்டியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் மினி கிளினிக் கட்டிடத்தை திறந்து வைத்தார். திமுகவைச் சேர்ந்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மாவட்டத்தில் நடக்கும் அரசு விழாக்களில் அ.தி.மு.க - தி.மு.க இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியிலும் அது எதிரொலித்தது.

கிளினிக் திறப்பு விழாவிற்குப் பிறகு நடந்த நலத்திட்டம் வழங்கும் விழாவில், மாவட்ட சேர்மன் மணிபாஸ்கரன் பேசும்போது அப்பகுதியில் உள்ள சில சாலைகளை தனது முயற்சியால் கொண்டு வந்ததாக பேசினார். அதற்கு, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுகவைச் சேர்ந்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.பெரியகருப்பன் எழுந்து,

பொன்.மணி பாஸ்கரன் பேச்சிற்கு ஆவேசமாக ஆட்சேபம் தெரிவித்தார்.

'திமுக ஆட்சிக்காலத்திலேயே தார்ச்சாலைகள் போடப்பட்டு விட்டதாகவும், அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேச வேண்டாமெனவும்' குறுக்கிட்டுப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் விழா பாதியிலேயே ரத்தாகி அமைச்சர் பாஸ்கரன் உள்ளிட்ட அ.தி.மு.கவினர் வெளியேறினர். மேடையில் இருந்த பெரியகருப்பன் உள்ளிட்ட தி.மு.கவினர் சிறிது நேரத்துக்குப் பிறகு கலைந்து சென்றனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments