சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.25 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

 

-MMH

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்கக முனையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சிங்கப்பூருக்கு 12 பெட்டிகளில் சுத்தமான 600 காட்டன் படுக்கை விரிப்புகள் (பெட் சீட்) ஏற்றுமதி செய்யப்படுவதாக எழுதி இருந்தது.

இந்த பெட்டிகள் வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் இருந்ததால் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அந்த பார்சல் பெட்டிகளை பிரித்து ஆய்வு செய்தனர். அப்போது பெட் சீட்டுகளுக்கு மத்தியில் மரக்கட்டைகள் மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். இது பற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் வந்து மரக்கட்டைகளை பரிசோதனை செய்ததில் அவை செம்மரக்கட்டைகள் என தெரியவந்தது.

செம்மரக்கட்டைகள் மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட சிறப்புமிக்க மர வகை என்பதால் அவற்றை பாதுகாக்கப்பட்டதாகவும், ஏற்றுமதி செய்ய தடை விதித்தும் அரசு அறிவித்து உள்ளது. இதையடுத்து சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்திச்செல்ல முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள 495 கிலோ எடைகொண்ட செம்மரக்கட்டைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அதை ஏற்றுமதி செய்த நிறுவன உரிமையாளரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மலேசியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் செம்மரக்கட்டைகளில் வீட்டு உபயோக பொருட்கள், மருத்துவ பொருட்கள் தயாரிக்கப்படுவதால் இவற்றை கடத்த முயற்சி செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ருக்மாங்கதன் சென்னை. 


Comments