போதை மாத்திரைகளுக்கு அடிமையான 40 லட்சம் பள்ளி மாணவர்கள்! குடிகெடுக்கும் 20 ரூபாய் ஏஜெண்ட்டுகள்!

     -MMH
         10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 40 லட்சம் பேர் மாத்திரைகளை போதைப் பொருட்களாகப் பயன்படுத்துகின்றனர் என்று மத்திய அரசின் சமூக நீதித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் கஞ்சா போதைக்கு மாணவர்கள் அடிமையாகி வருவது அண்மைக் காலமாக அதிகமாகி வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை கஞ்சாவைக் குறிவைத்து தேடுதல் வேட்டைகளைத் தொடங்கி நடத்தினர். அத்துடன் கெடுபிடியான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

ஆனால், மாணவர்களை போதைக்கு அடிமையாக்குவது என்ற விவகாரத்தில் உண்மையான அச்சுறுத்தல் வடிவம் வலி நிவாரணிகளான மாத்திரைகளாகவே உள்ளன என்ற அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆங்கிலத்தில் ஓப்பியோஸ் (opioids) என்று அழைக்கபப்டும் இந்த வகை மருந்துகள் பெரும்பாலும் வலி நிவாரணிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. 10 முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லும் சிறுவர்களில் 40 லட்சம் பேர் இந்த மாத்திரை போதைப் பழக்கம் உள்ளவர்கள் என்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய சமூக நீதிப் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் தரவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது ஆல்கஹால் (மது), கஞ்சா ஆகிய போதைபழக்கம் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்பதும் இங்கு கவலைக்குரியதும், கவனிக்கத்தக்கதும் ஆகும்.

அதாவது, கஞ்சா உள்ளிட்ட மூலிகை வகை போதைப்பழக்கம் உள்ளவர்கள் 20 லட்சம் மாணவர்கள். மதுப்பழக்கம் உள்ளவர்கள் 30 லட்சம் என்கின்றன தரவுகள். அதே சமயம் இந்த மாத்திரை போதைப்பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக உள்ளது.

வெறும் 20 ரூபாய் கொடுத்தால், இந்த மருந்துகளுக்கு டாக்டர் பரிந்துரையை வாங்கித்தரும் ஏஜெண்டுகள் ஆங்காங்கே இருக்கிறார்கள். அத்துடன், மாத்திரைகளின் விலையும் ஏறக்குறைய 60 ரூபாயிலிருந்தே கிடைக்கின்றன.

வருவாய் குறைந்த, அடித்தட்டு மக்களின் குடும்பத்துக் குழந்தைகள் இந்தப் பழக்கத்துக்கு பெரிதும் பழக்கப்பட்டு விடுகிறார்கள. இது கஞ்சாவை விட குறைந்த விலையில் கிடைப்பதும் குழந்தைகளுக்கு எளிமையாகிறது.

அத்துடன், கஞ்சாவோ மதுவோ பயன்படுத்தி, பெற்றோர்களால் பிடிக்கப்படும் போது ஏற்படும் பின்விளைவுகளை குழந்தைகள் விரும்புவதில்லை. அதிலிருந்து தப்பிக்கவும், எளிய வாய்ப்பாக இந்த மாத்திரைகள் உள்ளன. இது போன்ற காரனங்களால் பள்ளி செல்லும் குழந்தைகள் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர் என்கிறார்கள் போதை மறுவாழ்வு மையங்கள் நடத்தும் சமூக ஆர்வலர்கள்.

- நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

பாரூக். 

Comments