சிங்கம்புணரியில் திமுக நடத்திய மகளிர் கபடிப் போட்டியில் திருப்பூர் அணி வெற்றி! ₹.50,068 பரிசு!

     -MMH
     திமுக தலைவர் ஸ்டாலினின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு, சிங்கம்புணரியில் மாநில அளவிலான மகளிர் கபாடி போட்டி நடத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் விழா நடைபெற்றது. முதல் பரிசாக ₹.50,068 அறிவிக்கப்பட்டது.

இந்த கபாடி போட்டியில் திருப்பூர், கோவை, திருச்சி, சென்னை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இருந்து 22 அணிகள் களம் இறங்கின. லீக் அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டிகள் இரு தினங்களாக 35 போட்டிகளுக்கு மேலாக நடைபெற்றது. அரையிறுதிப் போட்டியில் தமிழக காவல்துறை அணியுடன் திருப்பூர் ஜெயசித்ரா அணி மோதியது.

இதில் 24/29 என்ற புள்ளிகள் பெற்று திருப்பூர் ஜெயசித்ரா அணி வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் ஈரோடு கொடிவேரி அணியுடன் ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி அணி மோதியது. இதில் 10/29 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஒட்டன்சத்திரம் அணி வென்றது.

இறுதிப்போட்டியில் ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி அணியும், திருப்பூர் ஜெயசித்ரா அணியும் மோதின.  போட்டியின் முடிவில் இரண்டு அணிகளும் தலா 21 புள்ளிகள் எடுத்து சமநிலையின் காரணத்தினால், டை பிரேக்கர் அடிப்படையில் இரு அணிகளுக்கும் தலா 5 ரைடுகள் வழங்கப்பட்டது. அதில் இரண்டு அணிகளும் 5 ரைடுகளிலும் தலா 5/5 என்ற அடிப்படையில் மீண்டும் சமநிலை புள்ளிகள் எடுத்தது போட்டியை இன்னும் விறுவிறுப்பாக்கியது.  

அதைத்தொடர்ந்து புரோ கபாடி நடுவர்கள் முடிவின்படி ஒரு அணியைத் தேர்ந்தெடுத்து ஒரு ரைடு அனுப்ப வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. டாசில் வென்ற திருப்பூர் ஜெயசித்ரா அணி முதல் ரைடிலேயே ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி அணியை வீழ்த்தியது.

இதில் வென்ற திருப்பூர் ஜெயசித்ரா அணி ₹.50068 பரிசுடன் வெற்றிக் கோப்பையை தட்டிச்சென்றது.  நடுநிசிவரை நடைபெற்ற இந்த விறுவிறுப்பான, பரபரப்பான மகளிர் கபாடி போட்டி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.  வெற்றிபெற்ற திருப்பூர் ஜெயசித்ரா அணிக்கு திமுக எம்எல்ஏ பெரியகருப்பன் ரொக்கப்பரிசு ₹50,068ம் வெற்றி கோப்பையும் வழங்கினர்.  

இரண்டாவது பரிசு பெற்ற ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி அணிக்கு ₹.40068 ம் வெற்றி கோப்பையும், மூன்றாவது நான்காவது இடத்தை வென்ற தமிழக காவல்துறை அணி மற்றும் கொடிவேரி ஈரோடு அணிக்கு தலா ₹.25000மும், வெற்றி கோப்பையும் வழங்கப்பட்டது.  சிறந்த டிபன்சராக திருப்பூர்  வினோதினிக்கு ரொக்கப்பரிசம், வெற்றி கேடயமும் , சிறந்த ஆட்டக்காரராக ஓட்டன்சத்திரம் பிரித்விக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நடுவர்களாக புரோ கபடி நடுவர்கள் சிவனேசகுமார், சந்தியா,  தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் நடுவர் அம்சு, மானாமதுரை செல்வக்குமார்,  தேசிய கபாடி நடுவர் அமர்பதி மற்றும் மாநில நடுவர்கள் பிரித்திவிராஜ், பவுன்ராஜ், சத்யராஜ், ராஜேஷ்குமார், பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர் விழா ஏற்பாடுகளை திமுகவின் சிங்கம்புணரி ஒன்றிய, நகர மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments