தமிழகத்தில் தழைத்தோங்கும் மத நல்லிணக்கம்! முஸ்லீம்களின் பள்ளிவாசலுக்கு மார்பிள் கற்கள் வழங்கிய இந்து தொழிலதிபர்!

 

-MMH

     நாகை மாவட்டம், புஷ்பவனம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒரு பள்ளிவாசலுக்கு இந்து சமுதாயத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மார்பிள் கற்களை வழங்கியுள்ளார். நாகை மாவட்டம், வேதாரண்யத்திலிருந்து 10 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது புஷ்பவனம் கிராமம். இங்கு சுமார் 2000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. சமீபத்தில் புஷ்பவனம் கிராமத்தில் ஒரு புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு, சமீபத்தில் அங்கு நன்றி அறிவிப்பு மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தப் பள்ளிவாசலுக்கு, மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்ற தொழிலதிபர் ஒருவர் மார்பிள் சலவை கற்களை வழங்கியுள்ளார். அவரது மருமகன் சரவணன் என்பவர் குவிமாடம் கட்ட நிதியளித்துள்ளார். நிகழ்ச்சி அன்று மாலை தொழுகை நேரத்தில் அந்தப் பள்ளிவாசலுக்கு வந்த கண்ணன், 

அங்கு பிரார்த்தனை செய்தார். அப்போது அங்கு தொழுகைக்கு வந்த நாகப்பட்டினம் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். இது குறித்து கண்ணன் கூறும்போது ‘இறைப்பணியில் எங்கள் குடும்பத்தின் பங்களிப்பது இருப்பது மன நிறைவைத் தருகிறது’ என்றார்.

புஷ்பவனம் கிராமத்தில் கிட்டத்தட்ட 100 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு காலம் காலமாக இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாக அந்த ஊர் மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

-ராயல் ஹமீது.

Comments