மாற்றம் ஒன்றே மாறாதது! பெட்ரோல்,டீசல்,கேஸுக்கு மாற்று! மத்திய அமைச்சர் அறிவுரை!

 

-MMH

     பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்து வருவதால், மக்கள் மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீரை ஒரு மில்லியன் கன அடி அளவிற்கு சுத்திகரிப்பு செய்யும் மையம் , ராணிபேட்டையில் அமைக்கப்பட்டுள்ளது. அடையாறு மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்தபடி, கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 'பெங்களூரு மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் இந்த திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார்' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 'விவசாயிகளிடமிருந்து கிடைக்கும் வேளாண் பொருட்களிலிருந்து எரிபொருள் தயாரிப்பது பசுவின் சாணத்திலிருந்து பெயிண்ட் தயாரிப்பது, உள்ளிட்ட மாற்று வழிகளை கண்டறிய அரசுகள் முயற்சிக்க வேண்டும்' என்றார். பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில் மக்கள் மாற்று எரிபொருளுக்கு மாறவேண்டும் என்று அறிவுறுத்துவதாகக் கூறினார்.

மேலும், உலக வங்கி உதவியுடன் ரூ.8.60 கோடி மதிப்பில் கிழக்கு கடற்கரை சாலை முதல் மாமல்லபுரம் வரை தானியங்கி வேக கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் நவீன போக்குவரத்து மேலாண்மை அமைப்பை மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தனர். இதன் மூலம், இந்த சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனத்தின் எண்ணை தானாக படம்பிடிக்கவும், விபத்துகளை கண்டறியவும் முடியும்.

பின்னர், சாலை பாதுகாப்பில் சிறந்த விளங்கிய மாவட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினர். சாலை பாதுகாப்பில் சேலம் மாவட்டம் முதலிடம் பெற்றது. முதலிடம் பெற்ற சேலம் மாவட்டத்துக்காக மாவட்ட ஆட்சியரிடம் விருதுடன் ரூ.25 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் பழனிசாமி வழங்கினார். அதே போல, சாலை பாதுகாப்பில் 2-ம் இடம் பெற்ற தஞ்சை மாவட்டத்திற்கு விருதுடன் ரூ.13 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 3-ம் இடம் பெற்ற திருவள்ளூர் மாவட்டத்திற்கு விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

-சோலை.ஜெய்க்குமார், சேலம்.

Comments