ஆண்டிபட்டி அருகே கால்நடை மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்!!

-MMH

ஆண்டிபட்டி அருகே மருத்துவமனைக்கு மருத்துவா் வராததைக் கண்டித்து கால்நடை மருத்துவமனையை பொதுமக்களும், விவசாயிகளும் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடமலை மயிலை ஒன்றியத்திற்குள்பட்ட கோம்பைத்தொழு கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இதில் ஒரு மருத்துவா் மற்றும் உதவியாளா் பணிபுரிந்து வருகின்றனா். கடந்த சில மாதங்களாக இங்கு பணிபுரிந்து வந்த மருத்துவா் சரியாக பணிக்கு வருவதில்லை. இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக அப்பகுதியில் கால்நடைகளை மா்மநோய்கள் தாக்கி வருகின்றன. மேலும் கால்நடை மருத்துவமனை மூடிய நிலையில் இருப்பதால் நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளை வெகு தொலைவில் உள்ள கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பாா்க்கும் நிலை உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் கோம்பைத்தொழு கால்நடை மருத்துவமனையை கால்நடைகளுடன் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து சென்ற கடமலைக்குண்டு போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது கால்நடை மருத்துவமனைக்கு மருத்துவா் வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக் தேனி. 

Comments