திட்டமிட்டபடி தொடங்கியது பஸ் ஸ்டிரைக்.. போராட்டத்தில் ஊழியர்கள் குதிப்பு.. அரசு கடும் எச்சரிக்கை!!

     -MMH
     சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். நள்ளிரவு முதல் தொமுச உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், பிப்.25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இந்நிலையில் திட்டமிட்டபடி போக்குவரத்து கழகங்களில் செயல்படும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் இன்று அதிகாலை முதல் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்ததால் தமிழகத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நள்ளிரவு முதல் 95% தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதாகவும், வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் இன்று நடைபெறும் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே இன்று விடுப்பு எடுக்க விண்ணப்பித்தவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக முன்னதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை முடியும் வரை போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ.13 கோடி செலவாகும். நாளை(இன்று) அனைத்து பேருந்துகளும் இயங்கும். மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஊழியர்களுக்கும் விரைவில் ஓய்வு கால பலன்கள்வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கையை ஏற்று போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Comments