இல்லத்தரசிகள் கண்ணீர்! கலங்க வைக்கும் விலைவாசி!

-MMH

     கோவையில் கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து சின்ன வெங்காயம், நாட்டு தக்காளி விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பருவம் தவறிய மழையால் பெரும்பாலான மாவட்டங்களில் சின்ன வெங்காயம் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக, கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட், டி.கே மார்க்கெட்டிற்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு ராசிபுரம், தாளவாடி, பல்லடம், ஆலாந்துறை ஆகிய பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயத்தின் வரத்து உள்ளது. பொதுவாக, 150 டன் வரை சின்ன வெங்காயம் வரத்து இருக்கும். ஆனால், தற்போது 40 முதல் 30 டன் மட்டுமே வரத்து உள்ளது.

குறிப்பாக, தாளவாடியில் இருந்து வரும் வரத்து மிகவும் குறைந்துள்ளது. வரத்து குறைவால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100 முதல் ரூ.130க்கு விற்பனை செய்யப்பட்டது. இது கடைகளில் சில்லறை விற்பனையில் ரூ.140 முதல் ரூ.160க்கு விற்பனையானது.

இந்த விலை உயர்வு அடுத்த 25 நாட்களுக்கு நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பல்லடம், ஆலாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அடுத்த 15 நாட்களில் வரத்து இருக்கும். அப்போதும், விலையில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர்கள் கூறினர். இதுதவிர, பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்து கிலோ ரூ.45 முதல் ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல், நாளுக்கு நாள் நாட்டு தக்காளியின் விலையும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடைகளில் நாட்டு தக்காளி கிலோ ரூ.40 முதல் ரூ.45க்கு விற்பனையானது. சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தப்படும் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து தற்போது வெங்காயம், தக்காளி விலை உயர்வு பொதுமக்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments