விவசாய கடன் தள்ளுபடி..! வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன..?

 

-MMH

     பட்டா, சிட்டாவுடன் குறிப்பிட்ட நிலத்தின் மீது விவசாயம் செய்வதற்காக நகைக் கடன் பெற்றிருந்தால் மட்டுமே, விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், வங்கிக்கடன் ரத்துக்கான ரசீது வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கிவைக்கிறார்.

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16,43,347 விவசாயிகளின் கடன் நிலுவை தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் அறிவித்தார். மேலும், 2021 ஜனவரி 31-ம் தேதி வரையிலான நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்வதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கடன் தள்ளுபடி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி, ஜனவரி 31-ம் தேதி வரையிலான குறுகிய கால பயிர்க்கடன், நகையீட்டின் பேரில் வழங்கப்பட்ட குறுகிய கால பயிர்க்கடனுக்கான அசல், வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஆனால், போலி ஆவணங்கள், புனையப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வழங்கப்பட்ட கடன் மற்றும் பினாமி கடன்கள் என நிரூபிக்கப்பட்டால் தள்ளுபடி பொருந்தாதும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், அரசு திட்டங்களின் கீழ் பயிர்க் கடன்களுக்காக மானியம் ஏதும் வாங்கியிருந்தால், பெறப்பட்ட மானியம் போக எஞ்சிய தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். முக்கியமாக, சிட்டா, பட்டா போன்ற ஆவணங்களுடன் குறிப்பிட்ட நிலத்தில் பயிர் செய்ய நகையீட்டின் பெயரில் பெறப்பட்ட நகைக்கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் எனவும், வேளாண்மை சாராத நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன் இந்த தள்ளுபடி திட்டத்தின் கீழ் பொருந்தாது எனவும் வழிகாட்டு நெறிமுறை கூறுகிறது.

மேலும், ஒவ்வொரு விவசாயிக்கும் கடன் தள்ளுப்படி செய்யப்பட்ட முறையான சான்றிதழ் மற்றும் நிலுவை இன்மை சான்று வழங்க வேண்டும் என்றும், தள்ளுபடி செய்த தகுதியான கடன்களை வசூலிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும் கூட்டுறவு சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-கிரி, ஈஷா.


Comments