யார் இந்த அலி மணிக்ஃபன்?

     -MMH
      பல்வேறு திறமைகளை கொண்ட அலி மணிக்ஃபனுக்கு பத்ப ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. யார் அவர் என்பதை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டிலுள்ள ஒலவண்ணாவில் தனது மனைவியுடன் வசித்து வரும் இவருக்கு பூர்வீகம் லட்சத்தீவில் உள்ள மினிகோய். கேரளாவில் 10 ஆம் வகுப்பு வரை படித்த அலியால், அதன் பின்னர் படிப்பை தொடரமுடியவில்லை. அதனால் அவர் மீண்டும் தனது சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார். அங்கு சென்ற அவருக்கு, மீன்கள் மீது தீராக்காதல் ஏற்பட்டது. அந்தக் காதல் அவரை மீன்கள் பற்றிய படிப்பை படிக்க உந்தித்தள்ளியது. 

விளைவு:- மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் மீன்கள் பற்றிய ஆராய்ச்சி பணியில் அவர் பணியமர்த்தப்பட்டார். ஆராய்ச்சி பணியில் ஒரு அரிய வகை மீனை கண்டறிந்ததால், அந்த மீனுக்கு அபுதெப்டுஃப் மணிஃபானி என்று பெயர் வைக்கப்பட்டது.

பிரெஞ்ச், ஜெர்மன், ஆங்கிலம் என 14 மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்த அலியை 1981 ஆம் ஆண்டு ஓமன் நாட்டுக்கு கப்பல் செய்வதற்காக ஐரிஷ் வோயேஜர் டிம் சிர்வென் அழைப்பு விடுத்தார்.

அவரது அழைப்பை ஏற்று, அவரும் அவரது குழுவும் இணைந்து 27 மீட்டர் நீளமுள்ள கப்பலை, உலோகங்களை பயன்படுத்தாமல் மரக்கட்டைகளையும், தேங்காய் நார்களையும் பயன்படுத்தி தயாரித்தது.

அந்தக் கப்பலுக்கு 'சோஹர்' எனப் பெயர் வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஓமனில் உள்ள ஒரு நகரம் 'சோஹர்' என்று அழைக்கப்பட்டது. அந்த கப்பலில் டிம் சிர்வெனும் அவரது குழுவும் ஓமனிலிருந்து சீனாவுக்கு பயணம் (9000 கிலோ மீட்டர்) செய்தது. தற்போது அந்தக்கப்பல் ஓமன் நாட்டு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இது அலி மணிக்ஃபன் கூறும் போது, "அந்த காலக்கட்டத்தில் கப்பல் செய்ய உலோகங்கள் பயன்படுத்தப்படாத நிலையில், நாங்கள் மரங்களையும், தேங்காய் நாரையும் கொண்டு அந்தக் கப்பலை வடிவமைத்தோம். ஓமனிலிருந்து சீனா வரை பயணம் செய்த அந்தக் கப்பல் தற்போது ஓமன் நாட்டு அருங்காட்சியத்தில் உள்ளது" என்றார்.

இவைத் தவிர லூனார் காலண்டரை வடிவமைத்தல், நீண்ட தூர பைக் ரைடு உள்ளிட்டவற்றிலும் அலிக்கு ஆர்வம் அதிகம். தனது பைக்கில், ரோலார் மோட்டரை புகுத்தி டெல்லி முழுவதும் பயணம் செய்திருக்கிறார்.

விவசாயத்திலும் ஆர்வம் கொண்ட இவர் திருநெல்வேலியில் 15 ஏக்கர் தரிசு நிலத்தில் உள்நாட்டு சாகுபடி முறைகளை புகுத்தி அதனை பசுமையான நிலமாக மாற்றியிருக்கிறார். இவைத்தவிர பாரம்பரிய பொருட்களைப் பயன்படுத்தி குடியிருப்பு வளாகங்களையும் உருவாக்கியுள்ளார். சிந்து பாத் கதாபாத்திரத்தின் தோற்றமும், இவரின் தோற்றத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதே. 

-சுரேந்தர்.

Comments